மண்முனை தென் மேற்கு பிரதேசசபை எடுத்த தீர்மானம் -படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலியான உறவுகளுக்கு ஆத்மசாந்திவேண்டியும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து சகவாழ்வுக்கு திரும்பவும் மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் தீபம் ஏற்றி மௌன பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு இன்று காலை பிரதேசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஆரம்பத்தில் குண்டுவெடிப்பில் பலியான உறவுகளுக்கு ஆத்மசாந்திவேண்டியும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து சகவாழ்வுக்கு திரும்பவும் தீபம் ஏற்றி மௌன இறைவணக்கம் செலுத்தப்ப்டது.

அதனைத்தொடர்ந்து சபை அமர்வின்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

பிரதேசசபையின் தவிசாளினால் முன்மொழியப்பட்ட இந்த கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கொக்கட்டிச்சோலை உட்பட படுவான்கரை மக்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு கொக்கட்டிச்சோலை பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவரும் வியாபாரிகளுக்கு இடைக்கால தடை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்த தற்காலிக தடையினை அமுல்படுத்த சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.