மட்டக்களப்பு வாவிக்குள் நடக்கும் சட்ட விரோத செயற்பாடு

மட்டக்களப்பு கடற்பகுதி,வாவிப்பகுதியில் சட்ட விரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவதை கட்டுப்படுத்தும் வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கடற்தொழில் மீன்பிடித்திணைக்கள அதிகாரிகள்,பொலிஸார்,மீனவர் சங்க பிரதிநிதிகள்,கடற்படை அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள்,நைட்டா உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சட்ட விரோத வலைகள் பாவிக்கப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுவதனால் மட்டக்களப்பு வாவியில் மீன்கள் அழிவடைந்துவருவதாக இங்கு மீனவர் சங்கங்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு வாவிக்குள் வைத்தியசாலை கழிவுகள்,இறால் பண்ணை கழிவுகள் மற்றும் சில ஹோட்டல் கழிவுகள் வெளியேற்றப்படுவதன் காரணமாக ஆற்றினுள் பாசிகள் உற்பத்தி குறைவடைந்து வருவதன் காரணமாக மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு குறித்த திணைக்களங்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.அவர்களின் இனங்கண்டு அவற்றினை தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டது.

குறிப்பாக சட்ட விரோத வலைகளின் பயன்பாட்டினால் மீனவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதுடன் மீன்கள் அழியும் நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.அதனடிப்படையில் அவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடற்படை,பொலிஸார்,மீன்பிடித்திணைக்களம்,மீனவர்சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு வாவிக்குள் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வாவியினை ஆழமாக்க நடவடிக்கையெடுக்குமாறு மீனவர் சங்கங்களினால் வலியுறுத்தப்பட்டது.அது தொடர்பிலான நடவடிக்கைகளை உரிய திணைக்களங்கள் ஊடாக ஆய்வுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்படும்.