உணர்வுபூர்வமாக நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு சத்துக்கொண்டான் படுகொலை நினைவுதினம் சத்துருக்கொண்டானில் உள்ள நினைவுத்தூபியில் நேற்று மாலை நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 09ஆம் திகதி காலையில் சத்துருக்கொண்டான்,பனிச்சையடி,பிள்ளையாரடி,கொக்குவில் ஆகிய பகுதிகளில் படையினராலும் ஊர்காவல் படையினராலும் சுற்றிவளைக்கப்பட்டு குழந்தைகள்,பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்கள் என 186பேர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போனார்கள்.

இவர்கள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட தினத்தினை சத்துருக்கொண்டான் படுகொலை தினமாக அனுஸ்டித்துவருகின்றனர்.

இன்று பகல் பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றன.

சத்துருக்கொண்டான் படுகொலைகளுக்கான நீதிகோரும் பொதுமக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.