வாகரை கிருமிச்சை பகுதியில் இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்க - யோகேஸ்வரன் எம்.பி




மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்தி பகுதியில் இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருமிச்சை சந்தி என்னும் பகுதியில் கடற்படைக்கு வழங்கப்பட்ட 540 ஏக்கருக்கு முன்னாக மரமுந்திரிகை திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட காணியை இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முகமாக 500 ஏக்கர் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் கோரி உள்ளதாக அறிகின்றேன்.

இராணுவத்தினருக்கு இங்கு காணி வழங்க முடியாது. ஏற்கனவே பல நூற்றுக் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. எனவே இவ்விடயமாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்செயற்பாடு சார்பாக ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், வாகரை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.