மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் அமர்வு - கட்சி பேதங்களுக்கு அப்பால் செயற்பட முன்வருமாறு அழைப்பு

கட்சி பேதங்களுக்கு அப்பால் இனமத பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

சுபையின் ஆரம்பத்தில் தியாகதீபம் அன்னை பூபதிக்கு முன்று நிமிடங்கள் நினைவஞ்சலி செலுத்தவேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வி.தவராஜாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு மூன்று நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய சபை அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 38 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் கொண்டுசெல்லும் வகையில் கல்வி, சுகாதாரம், காணி,விளையாட்டு,கலைகலாசாரம்,அபிவிருத்தி உட்பட எட்டு மாநகர கட்டளை நியதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

தலா ஆறு உறுப்பினர்களைக்கொண்டதாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன.

அத்துடன் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது பாதீட்டில் ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் குறை நிரப்பு பிரேரணை மூலம் சபையின் ஏகோபித்த தீர்மானங்கள் மூலம் சேர்க்கமுடியும் என்றும் உருவாக்கப்பட்டுள்ள பாதீட்டில் ஏதாவது மாற்றத்தினை சபையின் அனுமதியுடன் எதிர்காலத்தில் செய்யமுடியும் என்றும் சபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்றைய சபை அமர்வுகள் நிறைவுக்கு வந்தன.மட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய அமர்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்கொண்டுசெல்வது என்பது தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதன்போது கருத்துகளை முன்வைத்தனர்.