உள்ளுராட்சிமன்றங்களை கைப்பற்றி தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய போகின்றது - பிரசாந்தன் கேள்வி

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளை செய்யாதவர்கள் எவ்வாறு உள்ளுராட்சிமன்றங்களைக்கைப்பற்றி என்ன செய்யப்போகின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது.காரைதீவு தவிர்ந்த தமிழ் பிரதேசங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட  செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தியது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,அக்கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துதெரிவித்த பொதுச்செயலாளர்,

இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திருக்கோவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தது.

காரைதீவு பிரதேசத்தில் அங்குள்ள பொது அமைப்புகள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைவாகவும் அப்பகுதியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவும் தமிழ் மக்கள் விடுதலைகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் அறிவுறுத்தலுக்கு அமைய காரைதீவு பிரதேசசபைக்கு போட்டியிடவில்லை.

ஏனைய பகுதிகளில் தனித்துவமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடுகின்றது.அம்பாறை மாவட்டத்தில் வட்டமடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி குரல்கொடுத்துவருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்புகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.

தமிழர்களுக்கான அபிவிருத்திகளையும் அவர்களின் வலுவாக்கத்தையும் செய்வார்கள் என்று தமிழ் மக்களினால் ஆணை வழங்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றது.

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் எதிர்க்கட்சி தலைவரையும் வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்ககூடிய வாய்ப்பு இருக்கின்றது.ஆனால் அந்த வாய்ப்புகளை எல்லாம் கைநழுவி விட்டுக்கொண்டுள்ளனர்.

நல்லாட்சியில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மக்களை சென்றடையாத வகையில் அவர்களின் செயற்பாடுகள்இருக்கின்றது.வரவுசெலவுத்திட்டத்தில் கோரிக்கையினைமுன்வைத்து பேரம்பேசும் நிலையிருக்கும்போதும் அதனை அவர்கள் செயற்படுத்துவதில்லை.

குறிப்பாக அரசியல் கைதிகளில் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் காலங்களில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுகின்றது.நல்லாட்சி அரசாங்கத்தினை பயன்படுத்த தெரியாதவர்களாக கையாளாகாதவர்களாக இருக்கும் இவர்கள் உள்ளுராட்சிமன்றத்தினை கைப்பற்றி எவ்வாறு மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்வுகாணப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.