கல்லடி பாலத்தினை மறித்து போராட முயன்ற பட்டதாரிகளினால் பதற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து பாதையான கல்லடி பாலத்தினை மறித்து வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடாத்த முற்பட்டபோது அங்கு பதற்ற நிலையேற்பட்டது.

நல்லாட்சியில் கிழக்கு மாகாணசபையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று புதன்கிழமையும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஒன்று கூடிய பட்டதாரிகள் தங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வேலைகளைப்பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றுகூடிய பட்டதாரிகள் கல்லடி பாலத்தின் ஒரு பகுதியில்இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

ஆசிரிய போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய மாகாண அரசாங்கமே பட்டதாரிகளை ஏமாற்றாதே என்னும் கோசங்களை எழுப்பிய பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபையினால் தமக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தி|ருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரிகள் போட்டிப்பரீட்சையில் 98 புள்ளிகளைப்பெற்ற ஒருவர் தொழில்பெறும்போது 110 புள்ளிகளைப்பெற்ற மட்டக்களப்பு பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் தமது போராட்டத்திற்கு இதுவரை நியாயமான தீர்வினை வழங்கவில்லையெனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்த முற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் மாணவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

வீதியை மறித்து போராட்டம் நடாத்திய பட்டதாரிகள் மீண்டும் வீதியில் ஒரு பக்கமாக நின்று தமது போராட்டங்களை தொடர்ந்து நடாத்தியதுடன் ஊர்வலமாக சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளித்தனர்.