மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பசளையின் பற்றாக்குறையினால் விவசாயிகள் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்வதாகவும் தேவையான பசளைகளைப்பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதையும் வலிறுத்தி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இன்று சனிக்கிழi பகல் கொக்கட்டிச்சோலை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினால் உரமானியம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றிற்கான உரத்தினைப்பெறமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த காலத்தில் யுரியா உரம் விசிரா விட்டால் நெற்செய்கையில் எந்த அறுவடையும் பெறமுடியாத நிலையேற்படும் என தெரிவிக்கும் விவசாயிகள் உரம் கிடைக்காவிட்டால் விவசாயிகள் நஞ்சு அருந்தும் நிலைக்கே தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடாத்துவது ஏன்?,உரமானியம் வழங்கிய பணத்திற்கு உரம் இல்லையென்றால் விவசாயிகள் நஞ்சுக்குப்பியையா வாங்கி அருந்துவது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை தற்போது வேளான்மையுடன் இணைந்ததாக மஞ்சக்கோர புல்லு,முடிச்சுப்புல்லு,கோர,சேரொருவ புல்லு உட்பட புற்கள் வளர்வதன் காரணமாக வேளாண்மைக்கு தாக்கம் ஏற்படுவதாகவும் இந்த காலத்தில் பசளைகள் விசிராவிட்டால் நெற்செய்கை பாதிக்கப்படும் நிலைமையேற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகவும் வர்த்தக நிலையங்களிலும் பசளையினை பெறமுடியா நிலையேற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.