மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலி முன்னாள் பொறுப்பாளர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தன்னுடைய கணவரை விசாரணை செய்ய வேண்டும் என பல இனந்தெரியாத நபர்கள் வந்து போனதாகவும் அவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிபடுத்த மறுத்ததன் காரணமாக அவர்களை விசாரணை செய்ய தான் மறுத்ததாக அவர் தெரிவித்தார்.

தனது கணவரை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறியிருந்த நிலையிலேயே இன்று காலை பொலிஸாருடன் வருகை தந்த சிலர் தனது கணவரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று அங்கு பதிவு செய்துவிட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைக்காக கல்முனைக்கு கொண்டு செல்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளதாக பிரபா அவர்களின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் பின்னர் இராணுவத்தினரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததுடன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இவர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சந்திவெளியை பிறப்பிடமாக கொண்ட பிரபா அவர்கள் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது