இருதய நோயாளிக்கு சிறுநீரக சிகிச்சை மேற்கொள்வேன் என்பதுபோலவே பிரதமர் உரை இருந்தது - ஜனா

மட்டக்களப்புக்கு வருகைதந்த பிரதர் ரணில் விக்ரமசிங்க தமிழர் தாயகப் பிரதேசத்தில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற எதையுமே கண்டுகொள்ளாது குறைந்தபட்சம் நீங்கள் அனுபவித்த துயரங்களுக்கு மகிந்தவின் காட்டாட்சியே காரணம் என்று எம்மக்கள் மீது அனுதாபம் கூட காட்டாது, எவ்வித பேதமுமின்றி சமத்துவமாக வாழும் நிலைமையை ஏற்படுத்துவேன் என்று ஒப்புக்குத்தானும் ஒரு உறுதிமொழியை வழங்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்லடி- வேலூர் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டவனுக்கு துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்று விடைகொடுத்தவன் போலத்தான் மட்டக்களப்பிற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உரை இருந்தது. காரணம் பல தசாப்தகால ஆயுதப்போராட்டத்திற்கு இலக்காகி இருந்த தமிழின உணர்வுள்ள மக்கள் வாழும் மட்டக்களப்பிற்கு பிரதமர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகின்றார்.

புரையோடிப் புற்றுநோயாக இருக்கும் எமது இனப்பிரச்சினை தொடர்பாகவோ யுத்தம் எம்மக்கள்மீது ஏற்படுத்திய காயங்கள் தொடர்பாகவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏதாவது கூறுவார் என்று குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்களைக்கூட ஏமாற்றிவிட்டார்.

இனப்பிரச்சினை ஒன்று இருந்ததாகவோ, இருப்பதாகவோ எம்பகுதியில் நீண்டகாலமாக யுத்தமொன்று இடம்பெற்றதாகவோ இதன்மூலம் எம்மக்களது விலைமத்திக்கவொண்ணா உயிர் உடைமைகள் அழிக்கப்பட்டதாகவோ பல இடப்பெயர்களுக்கு எம்மக்கள் உட்பட்டதாகவோ, அகதி முகாம்களில் எம்மக்கள் அல்லலுற்றதாகவோ எதையுமே கூறாது றோட்டுப்போடக் காசு தருவேன், மீனைப்பாதுகாக்க குளிர்சாதனம் தருவேன், வெலிக்கந்தையில் வர்த்தகவலயம் அமைப்பேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருதய நோயாளிக்கு சிறுநீரக சிகிச்சை மேற்கொள்வேன் என்பதுபோலவே பிரதமர் அவர்களது உரை இருந்தது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற எதையுமே கண்டுகொள்ளாது குறைந்தபட்சம் நீங்கள் அனுபவித்த துயரங்களுக்கு மகிந்தவின் காட்டாட்சியே காரணம் என்று எம்மக்கள் மீது அனுதாபம் கூட காட்டாது எதிர்காலத்தில் தனது ஆட்சியில் வடகிழக்கு தாயகப்பிரதேசத்தில் இன,மத,மொழி ரீதியான குரோதமோ பிரிவினைவாதமோ தலைதுக்காது மக்கள் அனைவரும் எவ்வித பேதமுமின்றி சமத்துவமாக வாழும் நிலைமையை ஏற்படுத்துவேன் என்று ஒப்புக்குத்தானும் ஒரு உறுதிமொழியை வழங்கவில்லை. மாறாக யானைக்கு வாக்களித்து உங்கள் எதிர்காலத்தை உறுதிப்படுத்துங்கள் என்று எம்மக்களை நோக்கி கூறுகின்றார்.

ஏம்மக்களது எதிர் காலம் ரோட்டுப்போடுவதும், வீடுகட்டுவதும், வர்த்தக வலையம் அமைப்பதும்தான் என்று இன்னமும் ரணில் கருதுகின்றாரா. தமிழ் மக்களின் அபிலாசை என்னவென்பதை மீண்டும் ஒரு தடைவை ஆகஸ்ட் 17 இல் எம்மக்கள்; தெளிவாகக் கூறுவார்கள் அப்போது ரணிலுக்கும் அவர் கூட்டத்தினருக்கும் புரியும் தமிழ் மக்கள் அபிலாசை என்னவென்று.
தொட்டால் சுடும் நெருப்பு தொடாதே என்று எப்படி இடித்துச் சொன்னாலும் எம்மவர்கள் சிலருக்கு புரியாது. பட்டால் சிலருக்கு அறிவுவரும் இவர்களுக்கோ பட்டாலும் வராது.

தாமே ஐக்கியதேசியக் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் என்றும் ஆகஸ்ட் 17 இன் பின்னர் அரை அமைச்சர்கள் என்றும் தம்பட்டம் அடித்து அறைகூவும் இவர்களது உண்மையான மரியாதை என்னவென்பதை ஐக்கியதேசியக்கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் ரணில் அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகைதந்தபோது எம்மக்களுக்கு தெளிவாக விளங்கியது.
தம்போன்ற தரமான தமிழ் அரசியல் வாதிகள் ஐக்கியதேசியக்கட்சியோடு இணையவேண்டும் என்று ரணில் அழைத்தே தான் இணைந்ததாக கதைவிட்டார் ஒருவர். ரணில் என்றும் இனவாதியாக இருந்ததில்லை என்று சான்று கொடுத்தார் இன்னொருவர். எம்மக்களின் தேவைகளையெல்லாம் மகஜராக ரணிலிடம் கொடுப்பேன் என்றார் மற்றவர். ரணிலின் ஆட்சிக்கு சாட்சியாக பரமபிதாவையே அழைத்தார் வேறொருவர்.

இவ்வாறு இவர்கள் அமர்களப்படுத்திக்கொண்டிருக்க ரணில் மேடையேறி இவர்களை அம்பலப்படுத்தினார். ரணில் தமது உரையை ஆரம்பிக்கும் போது மேடையிலிருந்த வேட்பாளர்களான அமீர்அலி உட்பட ஒரிருவரையே விழித்தார். தனது வாயால் வேட்பாளர்களது பெயரை அறிமுகப்படுத்திய போதுகூட அமீர்அலி உட்பட ஓரிருவரையே தாமாகக் கூறினார்.
தமிழ் வேட்பாளர்களது பெயரை மேடையிலிருந்த யாரோ ஞாபகப்படுத்தித்தான் கடமைக்கு ரணில் கூறினார்.

இத்தனைக்கும் யுத்தகாலத்தில் இருந்து ஐக்கிய தேசியக்கட்சியை மட்டக்களப்பில் காப்பாற்றி நிலைக்கவைத்து தேசியப்பட்டியல் மூலம் எதிர்காலப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவாரென்று மேடையில் சிலரால் புகழப்பட்டவரைக்கூட மறந்துவிட்ட ரணில் யாரோ ஞாபகப்படுத்திய பின்னரே ஒப்புக்கு பெயரை ஒப்புவித்தார்.

இங்கும் கூட தேசியப்பட்டியல் உறுப்பினரை மட்டக்களப்பு தமிழர் ஒருவருக்கு வழங்குவேனென உறுதிகூறவில்லை. மாறாக யாணைக்கு வாக்களியுங்கள் என்றே எம்மக்களிடம் வேண்டினார். மட்டக்களப்பு என்றதும் ரணில் மனதில் யார் இடம் பெறுவார் என்பதை மடடக்களப்பு மேடை எம்மக்களுக்கு தெளிவாகவே புரியவைத்துள்ளது.

பேரினவாதக் கட்சிகளில் எம் தமிழர்களுக்கு என்ன மரியாதை கிடைக்குமென்று அடித்து இடித்து கூறினோம். இல்லை நாமே ராஜாக்கள், நாமே மந்திரிகள் என்று நம் மக்களிடம் வெளுத்துக்கட்டினார்கள். ரணில் இவர்களது சாயத்தை இவர்களின் முன்னால் எம் மக்களிடம் கலைத்துவிட்டார். தமது சாயம் கலைந்தது தான் இவர்கள் கண்ட மிச்சம்.