இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கல்லடி,நொச்சிமுனை பகுதியில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன.அவற்றில் கடந்த காலத்தில் பல ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் மிகுதி காணிகள் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பில் இருந்தது.
இந்த நிலையில் இவற்றில் 50 ஏக்கர் காணிகள் காத்தான்குடியில் இருந்து கழிவுநீரைக்கொண்டுவந்து குட்டையாக தேக்கிவைத்து சுத்தப்படுத்தி கடலுக்குள் பாய்ச்சும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது.
இந்த நடவடிக்கை அப்பகுதியில் பாரிய சூழல் சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதை உணர்ந்த அப்பகுதி ஆலயங்களின் பரிபாலன சபையினர்,விளையாட்டுக்கழங்கள்,பொது அமைப்புகள் இது தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் பாராளுமன்ற வளாகத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்குரிய அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.இது பிழையான செயற்பாடு என்பதை உணர்ந்த அமைச்சர் இதற்கு பொறுப்பான மேலதிக பொதுமுகாமையாளர் ஏ.குமாரரட்ன,பிரதம பொறியியலாளர் ஜ.சுதர்சன ஆகியோரை உடனடியாக பாராளுமன்ற வளாகத்துக்கு அழைத்து குறித்த நடவடிக்கை தொடர்பில் என்னுடன் கலந்துரையாடுமாறு பணித்தார்.
இதன்போது குறித்த பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன்.அங்கு குறித்த குட்டையினை அமைத்து கழிவுநீரை சேகரித்து சுத்தப்படுத்தும்போது அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆய்வுசெய்யப்பட்டதா,சூழல் அறிக்கைகள் பெறப்பட்டதா,சூழல் அதிகாரசபையிடம் அனுமதிபெறப்பட்டுள்ளதா என்று கேட்டபோது பெறப்படவில்லை எனவும் பதில் அளித்தார்கள்.
சூழல் அறிக்கைபெறப்படாமல்,அது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தவறான நடவடிக்கையென்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன்.அதுமட்டுமன்றி மிக முக்கியமாக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது அப்பகுதியில் உள்ள மக்களின் அபிப்பிராயம் பெற்றிருக்கவேண்டும் என்பதையும் அவர்களிடம் சுட்டிக்காட்னேன்.
இந்த நடவடிக்கை மக்களின் பூரண சம்மதத்துடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.அந்த மக்கள் அனுமதியளிக்காவிட்டால் அப்பிரதேசத்தில் அதனை மேற்கொள்ளமுடியாது என்பதை தெளிவாக அவர்களிடம் எடுத்துக்கூறினேன்.
இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இறுதியாக கல்லடியில் மேற்கொள்ளப்படும் மேற்படி செயற்றிட்டத்தினை நிறுத்துவது எனவும் அதற்கு பொருத்தமான காணியை காத்தான்குடியில் கண்டுபிடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரித்தார்.