இளைஞர்கள் எவரும் தனி மனித கொலைவெறியுடன் போராட்டதுக்கு வரவில்லை,இன விடுதலையை நோக்கியே வந்தனர் –ஜனா

விடுதலை இயக்கங்களில் தம்மை ஈடுபாட்டோடு இணைத்துக் கொண்ட இளைஞர்கள் எவரும் தனிமனித கொலைவெறிகளால் ஈர்க்கப்பட்டு இயக்கங்களில் இணைந்தவர்கள் அல்ல. மாறாக தமிழ்த் தேசியத்தால் ஆகர்சிக்கப்பட்டு இணைந்தவர்களே. அந்த இயக்கங்கள் அனைத்தும் மக்களால் அமோக ஆதரவைப் பெற்றவைகளே என ரெலோவின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா ) தெரிவித்தார்.

அண்மைக்காலமாக அவர் தொடர்பில் வெளிவரும் விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மைக்காலமாக பல்வேறு வலைத்தளங்கள் ஊடாகவும் முகப்புத்தகங்கள் ஊடாகவும் சில ஊடகங்கள் ஊடாகவும் என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றது. இத்தகைய தாக்குதல்களுக்கு எனது அணியினர் சிலரும் நான் சார்ந்துள்ள கூட்டமைப்பினர் சிலரும் எமது எதிரணியினர் சிலரும் உடந்தையாக இருப்பதாகவே உணருகின்றேன்.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட போதே என்மீதான தனிப்பட்ட வசைமாரிகள் பல்வேறு தரப்பினராலும் பொழியப்பட்ட போது இவற்றுக்கெல்லாம் பதில் கூறியாகிவிட்டது. எனினும் தற்போது இது புது வடிவத்தில் புது உத்தியில் புதுப் பொலிவோடு விசுவரூபம் எடுத்துள்ளது. இதற்கு பதிலளிக்காது விடின் இதுவே உண்மையாகி உண்மை இரட்டடிப்புச் செய்யப்பட்டும் விடும்.

நான் 1980களில் தமிழர் தம் பிரதேசங்களில் அலையென எழுந்த தமிழ்த் தேசியத்தால் ஈர்க்கப்பட்டு ஆயுதப் போராட்டத்தில் களமிறங்கியவன். என்னைக் போல பலர் இவ்வாறு ஈர்க்கப்பட்டு அப்போது இருந்த விடுதலை இயக்கங்களில் தம்மை ஈடுபாட்டோடு இணைத்துக் கொண்டவர்களாவர். என்னைப் போலவே இணைந்து கொண்ட இளைஞர்கள் எவரும் தனிமனித கொலைவெறிகளால் ஈர்க்கப்பட்டு இயக்கங்களில் இணைந்தவர்கள் அல்ல. மாறாக தமிழ்த் தேசியத்தால் ஆகர்சிக்கப்பட்டு இணைந்தவர்களே. அந்த இயக்கங்கள் அனைத்தும் அப்போது எம் மக்களால் அமோக ஆதரவைப் பெற்றவைகளே.

காலப்போக்கில் ஏற்பட்ட சகோர மோதல்கள் பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியமையும் எம்மக்கள் அறிந்தவையே இவற்றிக்காக சகல இயக்கங்களும் கவலையும் வருத்தங்களையும் தமது மக்களிடம் தெரிவித்தமையும் கடந்த கால வரலாறே. ஏன் குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் கூட சில துன்பியல் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டதுடன் அவற்றைத் தோண்டுவதில் பயனில்லை என பகிரங்கமாக பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்தமையும் யாவரும் அறிந்ததே.

இவ்வாறு கள நிலவரம் இருக்கையிலே தான் சில ஊடகவியலாளரின் நடுவன முயற்சியுடன் விடுதலைப் புலிகளின் அங்கீகாரமுடனும் பாராளுமன்றமூடாக சனநாயக கருத்துக்கள் ஊடாக தமிழ்த் தேசியம் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது உணரப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புக்கள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. இவ்வாறு உருவாகிய வேளை கடந்த கால துன்பியல் நிகழ்வுகள், கசப்பான அனுபவங்கள் மறக்கப்பட்டு அனைவரும் இணைந்து தமிழ் தேசியம் வேண்டும் என்பதே அப்போதைய, இப்போதைய தேவையாகவும் இருக்கின்றது.

கடந்த கால இயக்க நடவடிக்கைகளை ஒரு தனிமனிதனது நடத்தையாக சித்தரித்து தானும் மகிழ்ந்து மற்றவர்க்கும் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் ஒன்றை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர். அல்லது தமது வளர்ச்சிக்காக மறைத்து விடுகின்றனர்.

அடிக்கடி நான் கூறுவதுண்டு. நான் பிரச்சினைக்குரிய காலத்தில் மக்களை விட்டு மண்ணை விட்டு சென்றது கூட காலத்தின் கட்டாயம் என்று. நான் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலில் இன்று பங்குபற்றும் நூறுவீதமானோரும் அப்போது ஏதோ ஒரு நாட்டில் அஞ்ஞாதவாசம் செய்தவர்களும் வடக்குக்கிழக்குக்கு வரமுடிhயமல் இருந்தர்களுமே.

இது ஏதோ தமிழ்த் தேசிய துரோகம் போல எனக்கு காட்டப்படுகிறது எனின் என்மீதான தாழ்ப்புணர்வே. அத்தோடு நான் நம் சில அரசியல்வாதிகள் போல பொருளாதார வளம் சேர்க்க தமிழ்த் தேசியம் கதைப்பவனல்ல.

கதைத்தவனுமல்ல. இளமையிலேயே நான் தமிழ்த் தேசியத்தை வரிந்து களம்பல கண்டு விழப்புண் பல பெற்றவன்.

எனது அரசியல் மறு பிரவேசம் கூட நீண்ட காலத்தின் பின்னர் என்றாலும் அது மக்களால் நிராகரிக்கப்டாது மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதையே கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவு கூறுகின்றது. அப்படியானால் எனது முடிவு “கம்பியூட்டர் ஜில்மால்” என்றா என்னை விமர்சிப்போர் கருதுகின்றனர்.

என்மீதான விமர்சனம் எல்லாம் எனது மக்கள் செல்வாக்கு, எனது வளர்ச்சி கண்டு காழ்ப்புணர்வு கொண்டேர் எனது வளர்ச்சியினைச் சகிக்காத எம்மவர்களே செய்யும் சதி என்பது எம்மக்கள் அனைவரும் அறிந்ததே.

என்மீதான வசை மாலைகள் யாவையும் என் மார்பில் மலர் மாலைகளாக ஏற்றுக் கொள்கின்றேன். ஏன் எனில் நான் எனது மக்களை நம்புகின்றோன். மக்கள் என்னை நம்புகின்றார்கள். இதற்கு ஒன்று என்மீதான காழ்ப்புணர்வுகளுக்கு இவர்கள் செலவழிக்கும் நேரத்தை தமிழ்த் தேசியத்தின் விடியலுக்காகவும் சர்வதேச விசாரணைக்கு நம் மக்களை அறிவூட்டி தெளிவூட்டி தயார்ப்படுத்தவும் செலவழில்பார்கள் எனின் அது விரும்பத்தகதாக இருக்கும்.