மட்டக்களப்பின் மண்முனை - கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் மண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இப் பாலத்தின் வேலைகள் வரும் மே மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாலம் 210 மீற்றர் நீளமாகவும் 9.8 மீற்றர் அகலமாகவும் அமையவுள்ளதுடன், மேற்குப் பக்கம் 195 மீற்றர் கிழக்குப் பக்கம் 293 மீற்றர் நீளமும் கொண்ட தாம்போதிகளும் அமையவுள்ளன.
இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும்; அமைக்கப்பட்டு வருகின்றது.
பாலம் அமையவுள்ள இவ் வாவியின் கிழக்குமுனையில் மட்டு நகருக்கான பிரதான வீதி (ஏ-4)யையும், மேற்கு முனை விவசாயப் பகுதியாகவும் கொண்டுள்ளது. தற்போது கிழக்கிற்கும் மேற்கிற்குமான போக்குவரத்துக்காக இயந்திரப்பாதை சேவை நடத்தப்பட்டுவருகின்றது.
இப் பாலம், மேற்கு பகுதி விவசாய மக்களுக்கு கிழக்கு பகுதியுடன் இலகுவாக இணைந்து தமது உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பினைப் பெற ஒரு முக்கிய பாதையாக அமைகின்றது.
இத்திட்டமானது வீதிப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினாலும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவரினாலும் நெறிப்படுத்தப் படுகின்றது.
மட்டக்களப்பு – மண்முனைப் பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதம் 16ஆம்திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜப்பானிய தூதுவர் நுபிஹிடோ ஹோபோ ஆகியோரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக ஜப்பான் அரசாங்கம் 1250 மில்லியன் யென்களை நிதியாக வழங்கியுள்ளது.
மட்டக்களப்பின் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் மூலம் மட்டக்களப்பின் பொருளாதார முன்னேற்றம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம், எதிர்வரும் மே மாதத்தில் இப்பாலத்தின் வேலைகள் யாவும் பூரத்தி செயப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.


