போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (14.05.2026)ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்கமைப்பிலும் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஸ்ரீநேசன், வைத்தியர் இ. ஸ்ரீநாத், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி. மதிமேனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ. சுதாகரன், உதவிப் பிரதேச செயலாளர் சி. கமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் பல்வேறு துறைசார் அதிகாரிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது பிரதேசத்தின் வளர்ச்சி குறித்து பின்வரும் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
பல்வேறு அரச துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.





