எருவிலில் விபத்து –களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின்போது பொலிஸார் பக்கச்சார்பாக செயற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.

இன்று பிற்பகல் எருவில் பிரதான வீதியில் வான் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி பின்னர் அப்பகுதியில் நின்ற பெண்னொருவர் மீது மோதியுள்ளது.

இதன்போது ஆறு வயது சிறுமி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி மற்றும் அவரது தந்தை மற்றும் நின்றவருமாக மூன்று பேர் இதன்போது படுகாயமடைந்துள்ளனர்.இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக கூறி எருவில் பிரதேச மக்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.

இதன்போது குறித்த வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் உhயி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து அங்கு நின்றவர்கள் கலைந்துசென்றனர்.

எனினும் சம்பவத்தினை வேறு திசைக்கு மாற்றும் நடவடிக்ககைளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.