கிழக்கினை மையப்படுத்தியதாக விசேட பொருளாதார திட்டம் -பிரதமர் ஆரையம்பதியில் தெரிவிப்பு

யுத்ததினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்பும் வகையில் விசேட பொருளாரா அபிவிருத்தி திட்டம் ஒன்றை அறிமுகம்செய்யவுள்ளதாக பிரதம ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டிடம் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால திறந்துவைக்கப்பட்டது.

சுமார் இரண்டரைக்கோடி ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக பிரதேச செயலகத்திற்கான நிர்வாக கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன,வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,கடற்தொழில் நிரியல்வள,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சா எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க,அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலான,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதமரின் வருகையினை குறிக்கும் வகையில் பிரதேச செயலக வளாகத்தில் மரமொன்று பிரதமரினால் நடப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின் மாடிக்கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் விசேட கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றதுடன் இதன்போது உத்தியோகத்தர்களுக்கான அலுவலக பைகளும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

உள்நாட்டலுவல்கள் அமைச்சு மூலம் நாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.

உத்தியோகத்தர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்போது அது மக்களுக்கு சேவையினை வழங்குவதற்கு இலகுவானதாக இருக்கும்.

நாங்கள் பாரியளவில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். 2015,2016 ஆம் ஆண்டுகளில் அனைத்து கிராமசேவகர் பிரிவுகளுக்கும் நாங்கள் பதினைந்து இலட்சம் ரூபா வீதம் வழங்கினோம். பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதற்கான வசதி வாய்ப்புகள் இருக்கவில்லை. அதற்கான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

கிராமிய மட்டத்திலே பாரியளவிலான அபிவிருத்திப் புரட்சிகளை 2019,2020ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளவுள்ளோம். அதனை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்போகின்றோம். எல்லோரும் அதில் பங்குகொண்டு வேலை செய்வதற்காக அதனை நாங்கள் கிராமத்திற்கு முன்னெடுத்துச் செல்வோம்.

 அந்த அடிப்படையில் கிராம சக்தி வியாபார வேலைத்திட்டம் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கின்றது. கம்பெரலிய எனப்படும் கிராமப் புரட்சியை நாங்கள் ஏற்படுத்திக்கொண்டு செல்கின்றோம். இதற்குப் புறம்பாக வேறுபல புதிய வேலைத் திட்ட ங்களையும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

அதன்மூலமாக பாரிய வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தல், தேசிய இளைஞர் சேவை மன்றத்தினுடைய வேலைத் திட்டங்கள் போன்றவையெல்லாம் கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கு புறம்பாக செய்யப்படவிருக்கின்ற வேலைத்திட்டங்களாகும்.

கம்பெரலிய வேலைத்திட்டத்தை பாரியதொரு வேலைத்திட்டமாக நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். கிராமத்திலிருந்துகொண்டு வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தல்,குளங்களை அமைத்தல் போன்ற குறுகிய கால வேலைத்திட்டங்களுக்காகவே நாங்கள் நிதியொதுக்கியிருக்கின்றோம். அதனுடைய கேந்திரஸ்தலம்தான் பிரதேச செயலாளர் காரியாலயமாகும்.
கம்பெரலிய என்பது விசாலமானதொரு வேலைத்திட்டமல்ல.

பதினையாயிரத்திற்குட்பட்ட சிறுசிறு வேலைத்திட்டங்களாகும்.இவைகளை நாங்கள் சாத்தியப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. அதனை தாமதிக்காமல் செய்வதற்குரிய சகல வழிகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம்.

நிதிஅமைச்சில் செயலாளரை உட்படுத்தி குழுவொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். அவர்கள் திட்டங்களை தெரிவு செய்த பின்னர் என்னுடைய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினுடைய செயலாளர் அரசாங்க அதிபருக்கு இதுதொடர்பில் அறிவிப்பார். அதை உடனடியாக மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளருக்கு அனுப்பி அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அதுதொடர்பில் ஆராய்வதற்கு இன்னுமொரு குழுவை நாங்கள் ஸ்தாபித்திருக்கின்றோம். அனைத்து திட்டங்களையும் சாரம்சப்படுத்துவதற்காக திட்ட முகாமைத்துவ அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்களும் பிரதி அமைச்சர் வஜிர அபேவர்தன,தலவத்துகொட,ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஆகியோர் செயற்படுவார்கள். பதினெட்டு மாதகாலத்திற்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றவேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு சதத்தையேனும் திறைசேரிக்கு அனுப்பாமல் செலவுசெய்துகொள்ளுங்கள். கிராமத்திற்கு பணத்தை கொடுத்தால் அனைத்து திட்டங்களும் கிராம மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். அப்போது கிராடத்திலே பணப்புழக்கம் அதிகரிக்கும். அதனைத்தான் நாங்கள் செய்துகொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதால் வேறு ஒரு பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டினை இங்கு அமுல்படுத்த இருக்கின்றோம். சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அதனை அபிவிருத்தி செய்வதில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. போக்குவரத்துப் பிரச்சினையாகும். இந்தப் பகுதியில் விமான போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதன்மூலம் சுற்றுலாத்துறையினூடாக பலருக்கு வாழ்வாதாரம் ஏற்படும்.
கிழக்கில் ஜூன் தொடக்கம் ஒக்டோபர் மாதங்களில்தான் சுற்றுலாத்துறை மாதங்களாக இல்லாமல் அனைத்து மாதங்களும் சுற்றுலாத்துறை செயற்படும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.வத்தளையில் இருந்து விமான நிலைய போக்குவரத்தினை ஆரம்பிப்பதும் அதற்கு ஏதுவாக அமையும்.அப்போதுதான் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை வளர்ச்சியடையச்செய்யமுடியும்.

அனைத்தையும் செய்வதற்கு பாரியளவில் நிதிதேவையாகவுள்ளது.இந்த நாட்டினை நாங்கள் பாரமெடுக்கும்போது நிதியிருக்கவில்லை.நாட்டின வருமானம் போதுமானதாக இல்லாத நிலையிருந்தது.வட்டியினை வழங்குவதற்கு கூட நாட்டின் வருமானம் போதாத நிலையிருந்தது.மிகவும் வங்குரோத்தான நிலையிலேயே எங்களிம் நாட்டை பாரம்தந்துவிட்டுச்சென்றனர்.எனீனும் நாங்கள நாட்டினை பாரமெடுத்தோம்.இன்று அந்த கடன்களையெல்லாம் வழங்கி சர்வதேசத்தின் நம்பிக்கையினை நாங்கள் பெற்றுக்கொண்டுவருகின்றோம்.அந்த இரண்டினையும் செய்வதற்கு நாட்டின் வருமானம் அதிகரிக்கவேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது.வட் வரியை கூட்டவேண்டிய நிலையேற்பட்டது,வரிகளை கூட்டவேண்டிய நிலையேற்பட்டது.இதனால் மக்களின் சுமை அதிகரித்துள்ளது. அதன்காரணமாக அரசாங்கத்தினை திட்டுகின்றனர்.

2019ஆம் ஆண்டு அதிகளவான கடன்களை வழங்கவேண்டிய நிலையிருக்கின்றது.அந்த கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துவருகின்றோம்.இளைஞர்களுக்கு எதிர்காலத்தினை உருவாக்கிகொடுக்கவேண்டும்.அதனை மனதில்கொண்டே நாங்கள் செயற்படுகின்றோம்.

நான்கு போகங்களில் இந்த நாட்டில் வறட்சி இருந்தது.இப்பகுதிகளில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை எதிர்கொண்டது.அதற்குரிய நடவடிக்கைகளையும் நாங்கள மேற்கொண்டோம்.