அட்டப்பள்ளம் காணி பிரச்சினை –சகல தமிழ் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்கவேண்டும் -பிரசாந்தன் அழைப்பு

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் மக்களின் அவலத்தை தீர்ப்பதற்காக சகல கட்சி தலைமைகளுடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

குறித்த கிராமத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை(04) நேரடியாக சென்று மக்களை சந்தித்து உரையாடியதன் பிற்பாடு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை முதலில் சட்டரீதியான முறையில் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு தேவையான சகல உதவிகளையும் செய்ய தங்களது கட்சி தயாராகவுள்ளதாகவும் கூறினார்.

மேலும் குறித்த பிரதேச மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் மயானத்திற்கான ஆவணங்களை அடிப்படையாக வைத்து அதனை பெற்றுக்கொடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானித்துள்தாகவும் கூறினார்.

குறித்த சம்பவம் எதிர்காலத்தில் எந்தவித இனமுறுகலையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தாம் கவனமாகவுள்ளதாகவும் தனிநபர் பிரச்சினை சமூகங்களுக்கிடையிலான இனப்பிரச்சினையாக மாறிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக செயற்பட வேண்டும் என்றார்.

கடந்தகாலத்தில் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இனமுறுகல் நிலை தோன்றிய நிலையில் தமது கட்சி ஆட்சி அமைத்த பின்னர் அப்பிரதேசங்களில் சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் சம்பவம் நடைபெற்றபோது கொழும்பில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைக்கு சென்றிருந்தாகவும் அவரையும் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரின் தாய் அழுதவண்ணம் கவலையுடன் தெரிவித்தார்.

இச்செயற்பாடு எவ்வாறு நியாயமானது எனவும் பொது மயானத்தை தனியார் ஒருவர் கைப்பற்ற நினைப்பது அவர்களின் அரசியல் பலப்போடுதான் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் குறிப்பிட்டார்.

மயானத்திற்காக போராடிய அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்ந்துவரும் மக்களை கைது செய்து அவர்களின் வாழ்கை நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளமை நியாயமற்றது. ஆகவே உண்மைத்தன்மையை கண்டறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உருக்கமான கோரிக்கையினை முன்வைத்தார்.