தமிழ் தேசியத்தினை ஆதரிப்பவர்களுடன் மட்டுமே எங்கள் பேச்சுவார்த்தை இருக்கும் –பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் திட்டவட்டம்

தமிழ் தேசியத்தினை ஏற்றுக்கொள்கின்ற தமிழ் கட்சிகளுடன்தான் எமது பேச்சுவார்த்தைகள் இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

வுடகிழக்கு இணைப்பினையும் தமிழ் தேசிய கொள்கையினையும் ஏற்றுக்கொள்ளாத எந்த கட்சியுடனும் உள்ளுராட்சிசபை அமைப்பது தொடர்பில் பேசுவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஐநா.வின் பாதுகாப்புசபைக்கு இலங்கையினை கொண்டுசெல்லவேண்டும் என கஜேந்திரகுமாரும்,சுரேஸ்பிரேமச்சந்திரனும் கூறுவது எந்தளவுக்கு அர்த்தபுஸ்டியானது என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

சிவகரன் மற்றும் அனந்தி சசிதரனின் கட்சி உரிமை நீக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர்,
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பன விடயங்களில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஈடுபடச் செய்து அது தொடர்பான தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கும் முயற்சியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது.

அந்தவகையிலே தற்போதைய செய்திகளின் படி சுரேஸ் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது போன்ற வெவ்வேறான கருத்துக்களையும், பொய்மைகளையும் கூறி வருகின்றனர்.

உண்மையில் இந்த தீர்மானம் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட போது இது தமிழர்களுக்கு உதவாது என்று அதனை எரித்த கைங்கரியத்தையும் இவர்களே செய்தார்கள். ஆனால் அந்த விடயத்தைத் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மூலம் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி பொறுப்புக் கூறுகின்றதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற கடமையிலும், தீர்வு காண்பதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்குகின்ற நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக மிகவும் மந்தமாக என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் தொடர்ச்சியாக கருமமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நோரத்திலே தான் இதனை நாங்கள் வேறு வழிப்படுத்துவதாகக் கூறுகின்றார்கள்.

உண்மையில் எஞ்சியிருக்கின்ற ஓராண்டு காலத்திற்குள் இந்த விடயங்களிலே மிகவும் உறுதியாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக எமது தலைவரைச் சந்தித்த எல்லாத் தூதுவர்களிடமும் நாங்கள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம். இதனடிப்படையில் தான் இப்போது ஐநாவின் மனித உரிமை ஆணையகச் செயலாளர் ஹ{சைன் அவர்களின் அறிக்கையை எமது தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு வரவேற்றும் இருக்கின்றது.

உண்மையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற போது போர்க்குற்றம் உட்பட 34 விடயங்களுக்கு இதிலே தீர்வு எட்டப்பட இருக்கின்றது. இவை அல்லாமல் இந்த விடயத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு கொண்டு போகின்ற விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் மற்றும் சுரேஸ் ஆகியோர் கூறியிருக்கின்ற கருத்தானது எந்த அளவுக்கு அறிவு பூர்வமானது அல்லது எந்தவிதத்திலே அர்த்தபுஷ்டியானது என்பது தொடர்பிலே மக்களும் சிந்திக்க வேண்டும்.

ஐநா பாதுகாப்பு சபைக்கு இந்த விடயத்தைக் கொண்டு போவதென்றால் ஒரு நாடு கொண்டு போக வேண்டும் அது எந்த நாடு என்பது ஒரு கேள்விக்குறி. அடுத்து ஐநா பாதுகாப்பு சபைக்கு கொண்டு போகின்ற தீர்மானம் தொடர்பாக வீட்டோ பவரைப் பாவிப்பதற்கு ரஷ்யாவும், சீனாவும் தயாராக இருக்கின்றன.
இதனடிப்படையில் எமது தீர்மானங்களை ஐநா பாதுகாப்பு சபைக்கு போகின்ற போது அதனைக் கொண்டு போவதே மிகவும் கடினமானது, கொண்டு போனதற்குப் பிறகும் கூட வீட்டோ பவர் என்கின்ற விடயங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் நாங்கள் இதுவரை எடுத்த முயற்சியை முற்றுமுழுதாக மழுங்கடிக்கின்ற நிலைமையாகவே இருக்கும்.

அவ்வாறு இல்லாமல் இப்போது இருக்கின்ற இந்த நிகழ்ச்சி நிரலின் படி இணை அனுசரணை வழங்குகின்ற இந்த அரசுக்குக் கொடுக்கின்ற அழுத்தங்களின் மூலம் நல்லிணக்கத்தைக் காண்பது போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள், காணாமல் போனார் அலுவலகம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது, காணிகளை விடுவிப்பது, சிறைக்கைதிகளை விடுவிப்பது போன்ற பல்வேறு அம்சங்களையும் செயற்படுத்தக் கூடியதாக இருக்கின்ற இந்தத் திர்மானத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து அதற்குரிய பலாபலன்களைக் காண வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கின்றது.

ஜெனீவா தொடர்பான தீர்மானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னேற்றிக் கொண்டு இந்த ஒரு வருட காலத்திற்குள்ளே இந்த விடயங்களிலே தீர்வுகாண வேண்டும். குறிப்பாக அரசியலமைப்பு வரைபு தொடர்பில் நாங்கள் அடைவ ஒன்றை அடைந்திட வேண்டும் என்கின்ற வகையில் ஜெனீவாவினுடைய அழுத்தங்களை நாங்கள் பிரயோகிப்பதற்காக இருக்கின்றோம்.

உள்ளுராட்சிசபை அமைப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பல்வேறு கோணத்தில் எங்களை அணுகிக்கொண்டுள்ளனர்.உள்ளுராட்சிசபை அமைப்பதில் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில பேசும்போது எமது கொள்கை தொடர்பில் மிக முக்கியத்துவமாக கருதப்படுகின்றது.முற்றுமுழுதாக கொள்கையினை புறந்தள்ளிசெயற்படமுடியாத நிலையிருக்கின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினைப்பொறுத்தவரையில் தமிழ் தேசியத்தினை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் வடகிழக்கு இணைப்புக்கு முரணாணவர்களாகவும் உள்ளனர்.

வுடகிழக்கு இணைப்பு தொடர்பில் தெளிவான கருத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவிக்கவேண்டும் என எங்களை சந்தித்த கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்திடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்.அந்தவிடயம் தொடர்பில் இன்னும் தெளிவான பதிலை எங்களுக்கு தரவில்லை.அதனைவிடுத்து வேறு விடயங்களையே எங்களுக்கு சொல்லிக்கொண்டுள்ளனர்.

மிகமுக்கியமாக தமிழ் தேசியத்தினை ஏற்றுக்கொள்கின்ற தமிழ் கட்சிகளுடன்தான் எமது பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.