மாவடிமுன்மாரி குப்பைமேடு தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது

மட்டக்களப்பு மண்முனை மேற்கு(பட்டிப்பளை)பிரதேசசபைக்குட்பட்ட மாவடிமுன்மாரி,விடுதிக்கல் பகுதியில் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை விடுதிக்கல் பகுதியில் உள்ள குப்பை மேடு இனந்தெரியாதவர்களினால் தீமூட்டப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு மண்முனை மேற்கு பிரதேசசபையின் குப்பைகள் கொண்டுவரப்பட்ட டரக்டர்கள் வழிமறிக்கப்பட்டு குப்பை கொட்டுவதற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு பிரதேசசபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் வந்தபோதிலும் குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு பெரும் கஸ்டம் எதிர்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற அவர் அது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு மாநகரசபையுடன் தொடர்புகொண்டு தீயணைக்கும் படையின் உதவியினையும் பெற்றுக்கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தீகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.