தொழில் கல்வியை பெறும் வகையில் கல்விமுறையில் மாற்றம் - கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி

மாணவர்கள் கல்வியைப்பெறும்போதே தொழில் தகைமையினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்;டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் உள்ள வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப கல்வி பிரிவு மற்றும் கல்வி வள ஆலோசனை நிலையம் என்பனவற்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கலைமகள் மகா வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,இரா.துரைரெட்னம்,ஞா.கிருணபிள்ளை,பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் தொழில்நுட்ப கல்வியின் வளர்ச்சியை நோக்காக கொண்டும் தொழில் தகைமையினை நோக்காக கொண்டும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இரண்டு கோடி ரூபா செலவில் இந்த தொழில்நுட்ப கல்வி பிரிவு மற்றும் கல்வி வள ஆலோசனை நிலையம் என்பன அமைக்கப்படவுள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர்,
குழந்தைப் பருவம் என்பது கல்வி கற்கவேண்டிய பருவமாகும். இந்தப் பருவத்தில் உங்களுடைய குடும்பம் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருக்கக்கூடும். உங்களுடைய கல்வியை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு பல இடைஞ்சல்கள் இருக்கக்கூடும். ஆனாலும் இவைகளை வெற்றி கொள்ளவேண்டிய தேவை உங்களுக்கு இருக்கின்றது. பிரச்சனைகள் காரணமாக நீங்கள் உங்களது கல்வியை தவறவிடக்கூடாது.

அண்மையில் இந்தப் பாடசாலையில் உயர்தரப் பரீட்சை எழுத வேண்டிய ஒருமாணவன் பரீட்சை எழுதாமல் வேலை வாய்ப்பை தேடி சென்றிருக்கின்றான். இது இப்பிரதேசத்தினுடைய அல்லது மாணவர்களுடைய அல்லது பெற்றோர்களுடைய கல்வி மீதான அக்கறையை காட்டுகின்றது.

பாடசாலைகளுக்கு கட்டிடம் வேண்டும் தளபாடங்கள் வேண்டும் ஆசிரியர்கள் வேண்டும் என எத்தனையோ கோரிக்கைகள் சமூக நிறுவனங்களாலும் அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் அரசியல்வாதிகளாலும் அரசாங்கத்திடம் விடுக்கப்படுகின்றன. நாங்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

கல்வி அமைச்சர் என்ற ரீதியில் இம்மாகாணத்தில் இருக்கின்ற 1108 பாடசாலைகளுக்கும் கொடுக்கவேண்டிய முழு வளங்களையும் கொடுக்க முடியாது நாங்கள் சிலவேளைகளில் தத்தளிக்கின்றோம். எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களை முன்னுரிமை அடிப்படையில்தான் பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம். அப்பிரதேசத்தினுடைய மக்களோ மாணவர்களோ கல்வியில் அக்கறை கொள்ளாமல் பாடசாலைகளுக்கு ஒழுங்காக வருகை தராமல் இருந்தால் அனைத்தும் பயனற்றதாகிவிடும்.

ஒரு பிரதேசம் அபிவிருத்தியில் குன்றிய நிலையிலிருந்தால் அப்பிரதேசத்தை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு எதிர்கால இளைஞர்களான உங்களுக்கு இருக்கின்றது. கல்வியில்லாமல் வாழ்க்கை இல்லை என்ற வாசகம் இருக்கின்றது.

நாங்கள் பல துன்பங்களையும் அனுபவித்த மக்கள். கடந்த 60வருடங்களாக அரசியல் விடுதலை இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து இந்த நாட்டில் எங்களுடைய உரிமைகளுக்காக எங்களுடைய மக்கள்; எதிர்காலத்தில் சுதந்திரமாக உரிமை பெற்ற மக்களாக தங்களுடைய அபிவிருத்தியை தாங்களே கவனித்து செய்துகொள்கின்ற ஒரு இனமாக வாழவேண்டும் என்பதற்கான அரசியல் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

இந்தப் போராட்டங்களால் பல்வேறு இழப்புகளை நாங்கள் சந்தித்துவிட்டோம். 30வருடம் போராடியும் எமது மக்களுடைய அரசியல் விடுதலையை காணாதவர்களாகவே நாங்கள் இருக்கின்றோம். இவ்விடயத்தை பெரியவர்களும் அரசியல்வாதிகளும் பார்த்துக்கொள்வார்கள். சமூக நிறுவனங்கள் தமது சமூகத்தினுடைய அபிவிருத்திகளை  பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். பிள்ளைகளாகிய எமக்கும் சில கடமைகள் இருக்கின்றது.

எமது கல்வியை பூரணமாக நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இருக்கின்ற வளங்களை நாம் பயன்படுத்த தவறினால் எதிர்காலம் எமக்கு பிரச்சனைகள் நிறைந்ததாக சவாலாக அமையும்.

கல்வியில்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. பாடசாலைகள் தங்களுடைய கடமையை சரிவர செய்யும்போது பெற்றோர்களும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் வருகின்ற வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடைபெற்றுவருகின்ற அரசியல் போராட்ம் என்பது உங்களுக்காகவே நடைபெறுகின்றது. நீங்கள் எதிர்காலத்தில் சுதந்திரம் பெற்றவர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே நடைபெறுகின்றன. அதில் நியாயமான பல விடயங்கள் இருக்கின்றன. எதிர்கால பிரஜைகளான நீங்கள் உங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

நகர்ப்புறங்களில் பாடசாலைகளைவிட தனியார் வகுப்புகளை அதிகமாக நம்புகின்ற போக்கு காணப்படுகன்றது. பாடசாலைகளில் திறமை காட்டுகின்ற மாணவனே தனியார் வகுப்புகளிலும் திறமை காட்ட முடியும். பாடசாலைகளில் இருக்கக்கூடிய நல்ல ஆசிரியர்களை தயவு செய்து பயன்படுத்தி முன்னேறி வாருங்கள்.
பரீட்சைகளில் தேற முடியாதவர்கள் தொழிற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு கல்வி அமைச்சு பல திட்டங்களை வகுத்துள்ளது. உங்களுக்காக நல்ல பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுங்கள். பெற்றோர்களும் சமூகத்திலுள்ள பிரதானிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.