மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் -தயார் நிலையில் போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கத்தினால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகரித்துச்செல்வதாகவும் அதற்கான சிகிச்சைகளை வழங்க கூடிய வகையில் அனைத்து வசதிகளுடனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தயாராகவுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர் இப்ராலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்.

டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துவந்தது.தற்போது மார்ச்மாதம் அளவில் இதனது எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இருக்கின்றது.

ஜனவரி மாதம் 200க்கும் அதிகமான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் பெப்ரவரி மாதம் 376 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதுடன் இந்த மாதம் அது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எவ்வளவு நோயாளர்கள் வந்தாலும் அவர்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சகல வசதிகளும் உள்ளது.வைத்தியர்கள்,வைத்திய நிபுணர்கள்,தாதியர்கள்,மருத்துவகூட வசதிகள் உட்பட சிகிச்சையளிக்க கூடிய அனைத்து உபகரணங்களும் உள்ளன.
ஆனால் அந்த நோயைக்கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை பொதுச்சுகாதார பிரிவுடன் இணைந்து பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டும்.பொதுமக்கள் நுளம்பு பெருகும் இடங்களை சுத்தம்செய்யவில்லையென்றால் பெருகிவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிகையினை கட்டுப்படுத்தமுடியாமல்போகும்.

மட்டக்கப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்இனங்காணப்பட்டுள்ளனர்.இரண்டாவதாக ஏறாவூர் பகுதியில் அதிகளவில் டெங்கு நோயளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் கொழும்பில் டெங்கினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் தாக்கம் அதிகரித்த நிலையில் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.