கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி –வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் முதன்முறையாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தவுள்ளது.

காசிப்பிள்ளை சண்முகம் ஞாபகார்த்த கிண்ணம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி என்னும் பெயரில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்போட்டி  தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டுக்குழு தலைவர் கே.விஜயகண்ணன் மற்றும் ஏ.திவாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க விளையாட்டுக்குழு தலைவர் ஏ.கிருபாகரன்,செயலாளர் ரி.காந்தன் மற்றும் மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் 25ஆம் வரையில் நடைபெறும் இந்த சுற்றுப்போட்டியில் 25 உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றுகின்றன.

அரைநூற்றாண்டு பழமையினைக்கொண்ட கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இதுவரை காலமும் கிரிக்கட் போட்டிகளை பிரமாண்டமான முறையில் நடாத்திவந்த நிலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தவுள்ளதாக கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டுக்குழு தலைவர் கே.விஜயகண்ணன் தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடமாக உதைபந்தாட்டத்துறையின் வளர்ச்சிக்கு பெருமளவு நிதியினையொதுக்கி அதனை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் கடந்த இரண்டு வருடமாக உதைபந்தாட்ட போட்டிகளை நடாத்திவருகின்ற போதிலும் வித்தியாசமான முறையில் காசிப்பிள்ளை சண்முகம் ஞாபகார்த்த கிண்ணம் என்ற பெயரில் இந்த சுற்றுப்போட்டியை நடத்தவுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்க ஆதரவுடனும் ஏ,பி.பிரிவுகளில் இருந்து 22 கழகங்களில் இருந்து 25அணிகள் இந்த சுற்றுப்போட்டியில் மோதவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு இந்துக்கல்லூரி மைதானத்தில் இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.ஆரம்ப நிகழ்வுகள் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு மேலும் இரண்டு சுற்றுப்போட்டிகளை நடாத்துவதற்கு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான ஊடக அனுசரணையை எமது “மட்டு நியூஸ்” இணையத்தளம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.