அரசியல்வாதிகள் அனுதாபம் தெரிவிக்கதேவையில்லை, எமக்காக போராடுங்கள் -வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிப்பு

அரசியல்வாதிகள் எமது போராட்டம் தொடர்பில் அனுதாபம் தெரிவிக்கதேவையில்லை,எமது பிரச்சினைக்கான தீர்வினையே அவர்களிடம் வேண்டிநிற்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 18வது தினமாகவும் காந்தி பூங்கா முன்பாக அமைதியான முறையில் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

மத்திய மாகாண அரசாங்கங்கள் தமது நியமனம் தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியே தொடர்போராட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றர்.

இலங்கையில் 10ஆயிரத்து 800க்கு மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாகவும் ஒரு பாடசாலைக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் உள்வாங்கினாலேயே இலங்கையில் உள்ள பட்டதாரிகளின் தொழில் பிரச்சினை தீரும் எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கி;ன்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் தமது போராட்டம் தொடர்பில் எந்தவித சாதமான கருத்தினையும் வெளியிடாத நிலையில் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் தமது போராட்டம் வீரியமடைந்த போராட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனநாயக ரீதியான தங்களது போராட்டத்தினை ஒரு ஜனநாயக அரசு கண்டும் காணமல் இருப்பது ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.