அரச வைத்தியர்களின் போராட்டம் -ஸதம்பிதம் அடைந்த மட்டக்களப்பு வைத்தியசாலைகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8.00மணி தொடக்கம் முற்பகல் 12.00மணி வரை நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இன்று காலை சிகிச்சைகளுக்காக வந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

பாடசாலை மாணவர்கள்,பொதுமக்கள்,குழந்தைகளுடன் சிகிச்சைபெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகைதந்தபோதிலும் வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் திரும்பிச்சென்றதையும் காணமுடிந்தது.

இலவச சுகாதார சேவையினை இவ்வாறு வைத்தியர்கள் பொதுமக்களுக்கு வழங்கமறுப்பது தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.