முறக்கொட்டாஞ்சேனையில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீட்டினை வழங்குமாறு ஜனா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிபத்தில் வீடு முற்றாக எரிந்தவர்களுக்கு வீடு ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற தீவிபத்தில் முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியிலுள்ள ராமலிங்கம் யோகராசா என்பவரின் ஓலைக் குடிசை வீடு இன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்தமையினால் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

அத்துடன், உடுதுணிகூட இல்லாத நிலையில் 7 பேர் கொண்ட குறித்த குடும்பம் மரத்தின் கீழ் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.அன்றாடம் கூலித் தொழில் செய்து குடும்பத்தை கொண்டு வழிநடாத்த முடியாத நிலையில், அயவலர்களிடம் இருந்து கடன் பெற்று குடிசை வைத்து ஓலை மேய்ந்ததாகவும், இன்று அனைத்தும் சம்பலாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தீவிபத்து இடம்பெற்ற பகுதியi பார்வையிட்டதுடன் குறித்த குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

குறித்த சம்பவத்தின்போது ஆடைகள்,மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் உட்பட வீட்டின் அனைத்து பொருட்களும் எரிந்துவிட்டதாக மாகாணசபை உறுப்பினரிடம் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளருக்கு ஒரு தொகை நிதியுதவினை வழங்கிய மாகாணசபை உறுப்பினர் அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துன் கிரான் பிரதேச செயலாளர்,அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்ட மாகாணசபை உறுப்பினர் குறித்த குடும்பத்தின் நிலைமையினை எடுத்துரைத்து உடனடியாக வீடு ஒன்றை அமைப்பதற்கான உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

உடனடியாக குறித்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் தெரிவித்தார்.