களுவாஞ்சிகுடி பகுதிக்கு முதன்முறையாக வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மட்டக்களப்பு மாவட்டத்தின் நூறு வீதம் தமிழ் பகுதிகளைக்கொண்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் நேற்றுத்தான் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் எந்த காலப்பகுதியில் இந்த பிரதேசத்திற்கு ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்யவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நூறு வீதம் தமிழ் வேட்பாளர்களைக்கொண்ட பட்டிருப்பு தொகுதியின் இதயமாக காணப்படும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் 45 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

நூறு வீதம் தமிழ் பிரதேசங்களைக்கொண்டதன் காரணமாக இந்த நாட்டில் கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் இப்பகுதிக்கு வருவதில் அக்கரைகொள்ளவில்லை.
இந்த நிலையில் களுவாஞ்சிகுடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்தது வரலாற்று நிகழ்வாகவே கணிக்கப்படுகின்றது.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 514 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பல்வேறு கட்டிட தொகுதிகள் திறந்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது பட்டிருப்பு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் பணியாற்றிய அமரர் இராசமாணிக்கம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நினைவு கூர்ந்ததும் இப்பிரதேசத்தின் அரசியல் பழமையினையும் இனப்பற்றையும் வெளிக்காட்டி நின்றது.

தமிழர்களின் பகுதிகள் கடந்த கால ஆட்சியாளர்களினால் தமிழ் பகுதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு முழு சான்றாக களுவாஞ்சிகுடி பிரதேசம் இருந்துவருகின்றது.

பட்டிருப்பு தொகுதியில் கடந்த காலத்தில் மண்முனைப்பாலம் திறப்பதற்கு மகிந்த ராஜபகஸ வந்து சென்றார்.இதுவே பட்டிருப்பு தொகுதியில் ஜனாதிபதி ஒருவர் வந்து சென்ற பதிவாக இதுவரை பதிவாகியுள்ளது.