மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் மூன்றாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுவருகின்றது.

தமது நியாயமான போராட்டத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தீர்வினை வழங்கவேண்டும் என்ற கோசத்துடன் செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

இரவு பகலாக அமர்ந்திருந்து வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31க்கு பின்னர் பட்டதாரிகளாக வெளியேறியவர்களுக்கு இதுவரையில் மத்திய,மாகாண அரசுகள் நியமனங்களை வழங்காமல் கால இழுத்தடிப்புகளை செய்துவருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1600க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் அவர்களுக்கு கிழக்கு மாகாணசபையாவது நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த தகையில் உள்ளவர்களுக்கு நியமனங்கள் கிழக்கு மாகாணசபையில் வழங்கப்படும்போது பட்டங்களைப்பெற்றுக்கொண்டு வீட்டில் இருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் தமது குழந்தைகளையும் பல்கலைக்கழகம் அனுப்புவதினால் அவர்களுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமது போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஆதரவளிக்காமை தொடர்பில் பட்டதாரிகள் இதன்போது கவலை தெரிவித்தனர்.