எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல –சுரேஸ் பிரேமச்சந்திரன்

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல.அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையினைப்பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் பொதுச்செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு,திருமலை வீதியில் இந்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வர்த்தக நிலையங்கள் வீடுகள்,பொது நிறுவனங்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் எழுக தமிழ் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்,

எதிர்வரும் 10ஆம் திகதி காலை எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவரும் வருகைதரவுள்ளனர்.திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் எழுக தமிழ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.அதன்போது பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

தங்களது பிரச்சினைகள் வெளியுலகுக்கு தெரியவேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புகின்றார்கள்.அதிகளவான மக்கள் இந்த எழுக தமிழ் நிகழ்வுக்குவரவிருக்கின்றனர்.கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பேசும் மக்களும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவேண்டும்.

வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் நிம்மதியாகவாழNவுண்டும் என்பதுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இந்த எழுக தமிழ் நிகழ்வு ஊடாக வெளிக்கொணரப்படவுள்ளது.இந்த நிகழ்வு தமிழ் மக்களின் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கு வெளிச்சம்போட்டுக்காட்டக்கூடியதாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தமிழ் மக்களின் இன்றைய நிலையினை எடுத்துக்காட்டும் நிகழ்வாகவும் அமையும்.

அவ்வாறான இந்த எழுக தமிழ் நிகழ்விற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பங்குபற்றவேண்டும்.வடக்கின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே வடக்கு கிழக்கில் இந்த எழுக தமிழ் நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னன்ன கோரிக்கைகளை தேர்தலில் முன்வைத்ததோ என்ன கோரிக்கைகளுக்காக மக்கள் வாக்களித்தார்களோ அந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையிலேயே இந்த நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்படுகின்றதே தவிர அதற்கு எதிரான போராட்டம் அல்ல.