பதுக்கி வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை –பிரதியமைச்சர் அமீர்அலி

நெல்லை பதுக்குவோர் தொடர்பிலான விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து பதுக்கிவைத்துள்ள நெல்லை பறிமுதல்செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கப்படுவதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

சிலர் இந்த நாட்டில் அரசி தட்டுப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்த நெல் பதுக்கல் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டிப்பளை பிரதேசத்திற்கான அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பட்டிப்பளை பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.அத்துடன் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு அபிவிருத்திக்குழு அனுமதியளித்தது.

அத்துடன் சட்ட விரோத மண் அகழ்வு,யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகள்,விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்விப்பணிப்பாளர் நியமனம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் அமீர்அலி,
நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்தினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பிலான தகவல்களை விவசாயிகள் பிரதேச செயலங்களில்பெற்றுக்கொள்ளமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அறுவடை நெல்கள் மட்டக்களப்பில் களஞ்சிய சாலைகளில் சேமித்துவைக்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாடுகள் ஏற்படும்Nபுhது அவற்றினை பயன்படுத்தும் வகையிலேயே இதனை நான் மேற்கொண்டேன்.

தற்போது நெல் கொள்வனவுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நெல்லைப்பதுக்கி அரசிக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதன்காரணமாக விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து பதுக்கப்படும் நெல்லை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அரசாங்கம் கவனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லை கொள்வனவுசெய்யுமாறு அறிவிறுத்தல்க்ள வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.