அக்கரைப்பற்றில் மதுவரித்திணைக்கள முற்றுகை – சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 264 மூடை புகையிலை தூள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு,தபாலக வீதியில் இந்தியாவின் ஒடிசா பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச பிரதான பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் மதுவரித்திணைக்கள பரிசோதகர்களான பி.செல்வகுமார், கே.வாசன், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.குகனேசன், எஸ்.ஜனானந்தா,

கே.செந்தில்வர்ணன்,எஸ்.செல்வராஜா,கே.ரஜனிகாந்த்,தனஞ்செயன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது மறைத்துவைக்கப்பட்டிருந்த 264 மூடைகளைக்கொண்ட சுமார் 08ஆயிரம் கிலோ புகையிலைத்தூள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானது என மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டுவரப்பட்டு பீடி உற்பத்திசெய்யும் வீடு ஒன்றில் இந்த புகையிலை மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பீடி உற்பத்தி செய்யும் வீட்டின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள உதவி மதுவரி ஆணையாளர் கே.ஜி.எம்.பண்டார வருகைதந்து இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டார்.