கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குமாறு ஜனா கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13)விடுமுறை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை(11) காலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியை தொடர்புகொண்ட கோவிந்தன் கருணாகரம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துதெரிவித்த அவர்,

எதிர்வரும் சனிக்கிழமை தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை போயா விடுமுறை என்ற காரணத்தினால் இன்று புதன்கிழமை மாலை தூர இடங்களுக்கு செல்லும் ஆசிரியர்களும் மாணவர்களும் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

வெள்ளிக்கிழமையினை விடுமுறையாக அறிவித்து அந்த தினத்தை பிரிதொரு சனிக்கிழமைகளில் பாடசாலை நாளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.

இதனை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணசபை எதிர்வரும் வெள்ளிக்கிழமையினை விடுமுறையாக அறிவித்துள்ளது.

தமது சொந்த இடங்களுக்கு சென்று பொங்கலை கொண்டாடுவதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தூர இடத்தில் இருந்துவந்துள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில் வெள்ளிக்கிழமையினை விடுமுறையாக அறிவிக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

அது தொடர்பில் தான் பரிசீலித்து அறிவிப்பதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.