மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டியின் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று மாலை நடைபெற்றது.

கடந்த 03ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்றுவந்தது.

இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்தின் தலைவருமான போலந்து நாட்டை சேர்ந்த பவல் பொம்பலோஸ்ஹி மற்றும் பிரித்தானிய சோட்டாக்கன் கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து பிரதான பயிற்றுவிப்பாளர்களும் இதில் பங்குகொண்டனர்.

இறுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் திறந்த கராத்தே போட்டிகள் நடைபெற்றுவந்தன.

இந்த இறுதிப்போட்டியில் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும்இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர்.இறுதிப்போட்டியை தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,செங்கலடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர்,வாகரை பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி மற்றும் சர்தேச கராத்தே சம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்தின் தலைவருமான போலந்து நாட்டை சேர்ந்த பவல் பொம்பலோஸ்ஹி மற்றும் பிரித்தானிய சோட்டாக்கன் கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து பிரதான பயிற்றுவிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் நான்கு தங்க பதக்கங்களையும் ஐந்து வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக்கொண்டதுடன் யாழ் மாவட்ட அணியினர் மூன்று தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப்பதங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது அனைத்து பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றி மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.