மட்டக்களப்பில் கடுமையான மழை –படுவான்கரையில் போக்குவரத்துகள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக படுவான்கரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்;டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ள மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி,ஆயித்தியமலை-கரடியனாறு பிரதான வீதி,கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதி ஆகியவற்றினால் வெள்ள நீர் பாய்ந்துசெல்வதனால் எழுவான் கரைக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பகுதியில் பல பகுதிகளில் வீதிகளினால் வெள்ளம் பாய்ந்துசெல்வதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை-ஆனைகட்டியவெளி வீதி,சாளையடிவட்டை வீதி,மண்டூர் –வெல்லாவெளி வீதி ஆகிய வீதிகளினூடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேபோன்று வவுணதீவு-செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்பானைகுளம் உட்பட மூன்று சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக ஆயித்தியமலை-கரடியனாறு வீதியினுடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கெழுத்திமடு போன்ற சிறிய கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பிரதான போக்குவரத்து பாதையான கிரான்-புலிபாய்ந்தகல் பாதையின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் படகு சேவையை பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர்.
கிரான் பிரதேசத்தில் கோராவெளி உட்பட பல்வேறு பகுதிகளிம் வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனா.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவுகின்ற மழை கொண்ட காலநிலையானது எதிர்வரும் 30ம் திகதி வரை காணப்படும் என மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.
எதிர்வரும் 30ஆம் திகதிக்குப் பின்னர் மழை கொண்ட கால நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு மழைபெய்யும் நிலை குறைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று (27.01.2017) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு நகர் 31.4 மில்லி மீற்றர், மைலம்பாவெளி 71.4 மில்லி மீற்றர் , பாசிக்குடா 33.9 மில்லி மீற்றர் , உறுகாமம் 159.5 மில்லி மீற்றர் , உன்னிச்சை 127.3 மில்லி மீற்றர் , வாகனேரி 56.9 மில்லி மீற்றர் , தும்பன்கேணி 95.0 மில்லி மீற்றர் , நவகிரி 77.5 மில்லி மீற்றர் , வாகரை கட்டுமுறிவுக்குளம் 29.3 மில்லி மீற்றர் ஆகிய மழை வீச்சி பதவிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.