ஐரோப்பிய ஒன்றிய திட்ட கண்காணிப்பாளரும் மட்டு.மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியமும் சந்திப்பு(திருத்தம்)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்ட கண்காணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்போன்று நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சொன்ட் அமைப்பின் ஏற்பாட்டில் அக்டட் நிறுவன காரியாலயத்தில்; நடைபெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய,பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சர்வதேச திட்ட கண்காணிப்பாளர் திருமதி புனவ்ஸா குலாகோவா அவர்கள் கலந்துகொண்டதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் சொன்ட் மற்றும் அக்டட் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பாக தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன்,பொருளாளர் கே.கங்காதரன் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அக்டட் நிறுவனத்தின் பிரதிநிதிகள்,சொன்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் எதிர்கால வளர்ச்சியை நோக்காக கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டம் மற்றும் பயிற்சி நெறிகள் தொடர்பிலும் அதன் பயன்கள் தொடர்பிலும் திருமதி புனவ்ஸா குலாகோவா கேட்டறிந்துகொண்டார்.

யுத்தத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பிலும் ஊழல் செய்திகளை வெளியிடுவதால் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் திட்ட கண்காணிப்பாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியாக எவ்வாறான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஆராயப்பட்டன.