கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான போட்டி பரீட்சைகளை நிறுத்தி மாற்று வழிகளை உருவாக்குங்கள் -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,முதலமைச்சர் ஒரு ஆலோசனை குழுவினை அமைத்து பட்டதாரிகளுக்கான போட்டி பரீட்சையினை நிறுத்தி அதற்கான மாற்று வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனம் தொடர்பிலான அவசர பிரேரணை மீதான விவாதத்தின்போது உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பட்டதாரிகளை போட்டிப்பரீட்சை மூலம் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கு நான் முற்றுமுழுதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் தெரிவுசெய்யப்படும் நிகழ்வுகள் மிகவும் குறுகிய காலத்தில்தான் நடைபெற்றுவருகின்றது.

கடந்த காலத்தில் பட்டதாரிகளாக வெளிவந்ததும் ஆசிரிய தொழிலுக்குள் உள்வாங்கப்படும் நிலையிருந்தது.கடந்த ஆண்டு இறுதியில் கணித,விஞ்ஞான,ஆங்கில ஆசிரியர்களுக்காக வடமாகாணத்தில் பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் இன்றி ஆசிரிய தொழிலுக்குள் உள்வாங்கப்பட்டார்கள்.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கியது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.2007 தொடக்கம் 2009ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமது பட்டப்படிப்புகளை நிறைவுசெய்தவர்கள் மிகவும் பயங்கரமான காலப்பகுதியில் தமது பட்டத்தினை நிறைவுசெய்தபோதிலும் இதுவரையில் தொழில்வாய்ப்புகளை பெறமுடியாது உள்ளனர்.

2012ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்தவர்களும் 2016 ஆம் ஆண்டு பட்டதாரிகளாக வெளிவந்தவர்களும் உட்பட 5700பேர் ஆசிரிய போட்டிப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.2012ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்தவர்கள் நீண்டகாலத்திற்கு முதல் கல்வியை பூர்த்திசெய்தவர்கள் என்ற அடிப்படையில் தொழில் அற்றவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்தவர்கள் தொடர்கல்வியைப்பெற்றுவந்ததன் காரணமாக போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் உள்வாங்கப்படுகின்றனர்.

போட்டிப்பரீட்சைகள் மூலம்தான் பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கும் ஏனைய துறைகளுக்குள்ளும் உள்வாங்கவேண்டுமானால் பட்டதாரிகளில் ஒரு குறிப்பிட்ட பட்டதாரிகள் தொழில்களைப்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையேற்படும்.

2012 மற்றும் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டங்களை பூர்த்திசெய்த 35க்கு மேற்பட்ட பல பட்டதாரிகள் இன்னும் தொழில்பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

அவர்களும் அரச தொழிலைபெற்றுக்கொள்ளவேண்டுமானால் போட்டிப்பரீட்சையை மட்டும் நடாத்தி உள்வாங்காமால் வேறு வழிமுறைகளையும் கண்டறியவேண்டும்.போட்டி பரீட்சை மூலம் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரை உள்வாங்குவோமானால் சிரேஸ்ட அடிப்படையில் பட்டதாரியாகிய காலத்தினை அடிப்படையாக கொண்டும் அவர்களின் வயதினை அடிப்படையாக கொண்டும் பட்டதாரிகள் அரச சேவைக்குள் உள்வாங்கப்படவேண்டும்.

இந்த ஆசிரிய சேவைக்கு பட்டதாரிகளுக்கான போட்டிப்பரிட்சைக்கு உள்வாங்கப்படும்போதும் வேறு தொழில் இருப்பவர்களும் பங்குபற்றி சித்தியடைந்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மத்திய அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரிய போட்டிப்பரிட்சையில் சித்தியடைந்து ஆசிரிய சேவைக்குள் வருவதனால் பல பட்டதாரிகளுக்கான தொழில் பெறும் சந்தர்ப்பங்கள் இல்லாமல்போவதுடன் வெளிமாகாணங்களில் இருந்தும் போட்டிப்பரீட்சைக்கு உள்வாங்கப்பட்;டுள்ளனர்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர்,முதலமைச்சர் ஒரு ஆலோசனை குழுவினை அமைத்து பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையினை நிறுத்தி அதற்கான மாற்று வழிமுறைகளை உருவாக்கவேண்டும்.

எனவே புதிய பொறிமுறையை உருவாக்கி வெற்றிடமாகவுள்ள 1134 ஆசிரிய வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு ஒரு ஆலோசனைக்குழுவினை நியமித்து அடுத்தவாரமே இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும்.போட்டிப்பரீட்சைம ட்டும் வைத்து பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதை நிறுத்தவேண்டும்.