மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா முடக்கம் -பிரதியமைச்சர் அமீர்அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்தவேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள மீனவர் ஓய்வு கட்டிடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று அரசியல் பேசுவதற்கு எதுவும் இல்லாத காரணத்தினால் அரசியல் கட்சிகளிடையேயும் அரசியல்வாதிகளிடையேயும் மோதல்களை ஏற்படுத்தும் அரசியலே இன்று நடத்தப்படுகின்றது.
ஒரே காலகட்டத்தில் ஒரே கட்சி தொடர்ச்சியாக அதிகாரம் செலுத்தமுடியாது.இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இறக்கும் வரையில் தான் ஜனாதிபதியாகவே இருப்பேன் என்று நினைத்திருந்தார்.

இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்கமுடியாது என்பதையெல்லாம் மாற்றி எத்தனை தடவையும் ஜனாதிபதியாக இருக்கலாம் என்பதை மாற்றி மகிந்த ராஜபக்ஸ கனவு கண்டார்.அவ்வாறான அரசியல் தோற்றுப்போன சரித்திரத்தை சிறுபான்மை சமூகம் அவர்களுக்கு செய்துகாட்டியது.

அவருக்கு அவ்வாறான படிப்பினையை காட்டிய நாங்கள் எமது அரசியல் நிலையை எவ்வாறு வைத்திருக்கவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று அறுபது வருடங்களாக பேசியே வருகின்றோம்.இரண்டு தலைமுறைகளை நாங்கள் இழந்துவிட்டு இன்னுமொரு தலைமுறைக்கு அவற்றினை வழங்கிவிட்டுச்செல்லும் தலைவர்களாக நாங்கள் இருப்போமானால் முஸ்லிமாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் அது நல்ல கட்சியாகவும் இருக்கமுடியாது நல்ல தலைவர்களாகவும் இருக்கமுடியாது.

அவசரஅவசரமாக தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து தங்களது பிரச்சினைகளை,சந்தேகங்களை தீர்க்கவில்லையானால் எதிர்காலத்தில் கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்படுகின்ற அபாய எச்சரிக்கைகள் இன்று எழுந்துள்ளன.

தமிழ்,முஸ்லிம்,சிங்கள கட்சிகளாக இருக்கலாம்.சிங்கள கட்சிகளுக்குள் வரும் பிளவுகள் சமூகத்தை பாதிப்பதாக இருக்காது.சிறுபான்மை கட்சிகளுக்குள் வரும் பிளவுகள். இலக்கை மாற்றும் நிலையேற்படும் என்பதை தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு கூறிக்கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் பழைய பல்லவிகளைப்பாடி வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தமிழன் என்று சொல்லும் அணியும் ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் குரல் இதையெல்லாம் ஐந்து வருடத்திற்கு ஒரு தடவையே மீட்டுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 2700மில்லியன் ரூபாக்கள் சேமிப்பில் உள்ளது.அதற்கு பொறுப்பான அதிகாரி அந்த பணத்தை வைத்துக்கொண்டு அடைகாக்கின்றார்;.

அதிகமாக சேமித்துவைத்துள்ளோம் என தேசியத்தில் சொல்வதற்காகவும் அதன் அமைச்சரிடம் கைதட்டல் எடுக்கவேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 270கோடி ரூபாவை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளில் நிரந்தர வைப்பில் வைத்துக்கொண்டு அடைகாக்கும் செயற்பாடுகளை இந்த அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது.

மட்டக்களப்ப மாவட்டத்தின் வறுமையினை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால் நிதிநிறுனங்கள் மக்களை சுரண்டுகின்றது அவற்றினை தடுக்கவேண்டும் என்று நினைக்கும்போது திறமையுடன் செயற்படும் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டம் சீரழிந்துசெல்லும் விடயத்தினை பாராமுகமாக இருப்பார்களானால் அரசியல்வாதிகள் பிழை விடுகின்றார்கள் என்பதே அதன் கருத்தாகும்.

270 ரூபாவை அமைச்சரின் சான்றிதழுக்காக வைத்துள்ள நிலைமையினை மாற்றவேண்டும் என அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இந்த 270 கோடி ருபா பணத்தில் ஐம்பது வீதத்தை கூட பிரதேச செயலகப்பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்தால் குறிப்பிட்டளவு வறுமையினைப்போக்கியிருக்ககூடிய நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குள்தான் உள்ளது.

இவ்வாறு இந்த பணம் விடயத்தில் குஞ்சுகளை அடைகாப்பதுபோல் அடைகாக்கும் அதிகாரிகள் தொடர்பில் இந்த அரசியல்வாதிகள் பேசவில்லையென்றால் தமிழ் மக்களுக்கு அவர்களும் இணைந்து துரோகம் செய்கின்றனர் என்ற விடயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.