புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் வழிபாடுகள்

உலகின் மீட்புக்காக அவதரித்த ஜேசு கிறிஸ்துவின் பாலன் பிறப்பினை குறிக்கும் நத்தார் பண்டிகையினையொட்டி இன்று நள்ளிரவு ஆலங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

உலகில் மக்களை நல்வழிப்படுத்தி பாவங்களில் இருந்து மீட்பதற்காக மாட்டுத்தொழுவத்தில் அவதரித்த இன்றைய தினத்தில் இந்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாட்டு நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் நத்தார் வழிபாட்டின்போது சுட்டுக்கொல்லப்பட்ட மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை நடாத்தினார்.

இதன்போது பாலன் பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு காட்சியை பாலன் திருச்சொருபம் வைக்கப்பட்டு ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட நத்தார் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் இதன்போது கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டது.

அத்துடன் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் நாட்டில் நீடித்த சமாதானம் ஏற்படவும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நத்தார் பண்டிகை வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.