மதுபோதையில் வாகனம் செலுத்தவேண்டாம் -மட்டக்களப்பில் தீவிர பிரசாரம்

வீதி விபத்துகளை குறைக்கும் வகையில் சமூக மட்ட வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலான செயற்றிட்டம் ஒன்றை பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அதிகளவு வாகன விபத்துகள் பதிவுசெய்யும் மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம்,சர்வோதயம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டு.-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராயச்சி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் முச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றுக்கு “நான் நற்பண்புள்ள சாரதியாவேன்,எனது நற்பண்புடனான வாகன செலுத்துகை மூலம் எனதும் பிறரினதும் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாக்கப்படுகின்றன,நான் எப்போதும் பாதுகாப்பான முறையில் வாகனத்தை செலுத்துகின்றேன்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன.

அத்துடன் பாதுகாப்பான முறையில் வாகனகங்கள் செலுத்துவது தொடர்பான அறிவித்தல் பலகை திறந்துவைக்கப்பட்டதுடன் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

மதுபோதையில் வாகனங்களை செலுத்தவேண்டாம் என்பது தொடர்பில் இதன்போது தீவிர பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.