கழிவுப்பொருள் எரிக்கும் நிலையத்தினை மூடுமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் (VIDEO)

(லியோன்)

 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு நாமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுப்பொருள் எரிக்கும் நிலையத்தினை மூடுமாறு கோரி பிரதேச மக்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


குறித்த கழிவுப்பொருள் எரிக்கும் நிலையத்தினை முற்றுகையிட்ட பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நாவலடி பகுதி மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளதுடன் நாவலடியில் இருந்த நாமகள் வித்தியாலயமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் குடியிருப்புகள் செறிந்து காணப்படும் நிலையிலும் வைத்தியசாலை மற்றும் பாடசாலை ஆகியவற்றுக்கும் மத்தியில் குறித்த  கழிவுப்பொருள் எரிக்கும் நிலையதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பிரதேச மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்,அரசியல்வாதிகள் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தபோதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் குறித்த கழிவுப்பொருள் எரிக்கும் நிலையம் செயற்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த கழிவுப்பொருள் எரிக்கும் நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆகியவற்றின் அனுமதியெதுவும் பெறப்படாத நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிக்கின்றனர்.

கழிவுப்பொருள் எரிக்கும் நிலையம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது அது தொடர்பில் ஆராயுமாறு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளபோதிலும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிலையம் இயங்குமானால் பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள்.கர்ப்பிணிப்பெண்கள்,வயோதிபர் பாதிக்கப்படும் நிலையேற்படும் எனவும் உரிய அதிகாரிகள் இவற்றினை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதுடன் அவ்வாறு தடுக்காதபட்டத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

சிறிய தொழிற்சாலை அமைப்பதற்கு மின்சாரம் தேவையென்றால் சுற்றாடல் அதிகாரசபையின் அறிக்கைகோரும் இலங்கை மின்சாரசபை இந்த கழிவுப்பொருள் எரிக்கும் நிலையத்திற்கு மட்டும் அந்த அறிக்கையினை ஏன் கோரவில்லையெனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மக்கள் வசிப்பிடத்தில் இவ்வாறான நிலையங்களை குறித்த பகுதி மக்களின் அனுமதியில்லாமலும் அதிகாரிகளின் அனுமதியில்லாமலும் ஒரு அரச நிர்வாகத்தினால் எவ்வாறு அமைக்கமுடியும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


தம்மிடம் வாக்கு வாங்குவதற்காக வரும் அரசியல்வாதிகளும் தமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் வாய்மூடிகளாகவே இருந்துவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.