கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முகத்தில் வெள்ளைத்துணியை போட்டுச்செல்லும் நிலையேற்படும் -பிரதியமைச்சர் அமீர்அலி

நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர்,நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை என்கின்றனர்.எங்களால்தான் முதலமைச்சர் வந்தார் என்கின்றார்கள். வேலைநடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள்.இதனைவிட கேவலம் என்ன உள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீன்பிடியாளர்கள் மற்று பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்த நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரதியேக செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், இணைப்பாளர் ஜோன் லோகநாதன் பாஸ்டர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனைப்பற்றில் வறிய நிலையில் உள்ள மீனவர்கள் மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்கள் 76பேருக்கான தொழில் உபகரணங்கள்,வலைகள் என்பன வழங்கப்பட்டன.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக இந்த தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் அமீர்அலிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவருகின்றனர்.ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சர் அமீர்அலிக்கும் இடையில் எதுவித முரண்பாடுகளும் கிடையாது.

சில மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதை எங்கு பேசவேண்டும் என்று அவர்களுக்கு தெரியாத நிலையுள்ளது.தாங்கள் அனுபவசாலிகள் என்று கூறிக்கொண்டு தலைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாமல்பேசுவதனை எங்களால் சகித்துக்கொள்ளமுடியாத நிலையே எங்களுக்கு உள்ளது என்பதை இந்த தமிழ் சமூகத்திற்கு சொல்லியேயாகவேண்டும்.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முதல்கட்டமாக தங்களது பதிவுகளைசெய்து செல்லுங்கள் என்று கூறியும் கூட்டம் நிறைவுபெற்றதும் எடுக்கப்படும் தீர்மானத்தை உங்களுக்கு தருகின்றோம் என்றும் ஊடக நண்பர்களுக்கு சொல்லப்பட்டாலும் கூட அதுவேறு வகையாக திரிபுபடுத்தப்பட்டு நான் அவர்களை அனுமதிக்கவில்லையென்ற காட்டமான பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.அதற்கு நான் அஞ்சுபவன் அல்ல.

ஆனால் மாகாணசபையில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்கள் மாகாணத்திற்குள் இருக்கும் அதிகாரத்தை அவர்களே கேட்டுக்கொள்ளாமல்பேசிக்கொள்ளாமல் மட்டக்களப்புக்கு வந்து செய்திகொடுப்பதற்காக செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்.மக்களை ஏமாற்றவேண்டும் என்று பேசுகின்றனர்.இதனை தவிர்த்துக்கொள்வதற்காகத்தான் ஊடக நண்பர்களை இதிலிருந்து சற்று விலகி ஒத்துழைக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

மாகாணசபை கல்விக்குரிய பிரச்சினை,மாகாணசபை எல்லைக்குரிய பிரச்சினைகள் தொடர்பில் மாகாணசபையில் பேசாமல் மாகாணசபை அதிகாரிகளுடன் பேசாமல் அவர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தியுள்ள மாகாண முதலமைச்சரிடம் பேசாமல் அவர்கள் உருவாக்கியுள்ள அமைச்சர்களிடம் பேசாமல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் உரத்து பேசுகின்றார்கள் ஊடகவியலாளர்கள் அதனை எடுத்துக்காட்டவேண்டும் என்பதற்காக.

உண்மையில் அது அங்குபேசப்படவேண்டிய விடயம் அல்ல.பிரதேச செயலாளர் மட்டத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நேரடியாக பேசி மாகாணசபை மட்டத்தில் பேசக்கூடிய பிரச்சினைகளை பேசி தீர்க்காமல் அதற்குரிய பிரச்சினைக்கு தீர்வுகொடுக்க தெரியாமல் ஒரு சிலர் வாய்க்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லாமல்பேசுகின்றனர்.கவலையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

இந்த நிலை மாறவேண்டுமானால் ஊடகத்துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகவுள்ளது.அந்த பங்களிப்பு இருக்கும்போதே அவர்கள் சற்று அமைதியாக பேசும் விடயத்தினை எதிர்பார்க்கமுடியும்.

அதுமட்டுமன்றி ஒரே விடயத்தினையே எல்லோரும் பேசுகின்றனர்.ஒரு மின்கம்பம் வீழ்ந்துவிட்டால் எல்லா மாகாணசபை உறுப்பினர்களும் எழுந்து அது தொடர்பில் பேசுகின்றனர்.நானும் பேசினேன் என்று ஊடகத்தில் வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றனர்.இது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் செயலாக கடந்த காலத்தில் கண்டுகொண்டுள்ளோம்.ஓரே விடயத்தினை தொடர்ந்து எல்லோரும் பேசும் தேவையிpல்லை.

ஒருபேச்சுப்போட்டி வைத்து பேசவிரும்புகின்ற மாகாணசபை உறுப்பினர்களை வெபர் மைதானத்திற்கு அழைத்து அவர்களுக்கு கொடிகட்டி அவர்கள் பேசி அலுக்கும் மட்டும் பேசவைக்கவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகளை நேர்மையோடும் தன்னம்பிக்கையோடும் கொண்டுசெல்லவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.நியாயமான முறையில் நேர்மையான முறையில் மக்களை ஏமாற்றாத முறையில் மக்களுக்கு போலியான பிரச்சாரங்கள் இல்லாத முறையில் அரசியலையும் அதிகாரிகளின் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று நாங்கள் விரும்பும் காரணத்தினால் ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருங்கள் என்று அவர்களிடம்கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த மாவட்டத்தில் எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் தவறிப்போயுள்ளது என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.அது தொடர்பில்பேசுவதும் கிடையாது.அதனால் இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில்பேசுவது கிடையாது.வெறுமனே மக்களுக்கு சூடேற்றி முறுக்கேற்றும் வசனங்களைப்பேசி வீர வசனங்களை பேசும் விடயங்களை கடந்த காலத்தில்செய்தார்கள்.

தற்போது ஒரு விடயமும் இல்லையென்ற காரணத்தினால் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக சிலவேளைகளில் துவேசத்தினையும் அவர்கள் பேசுகின்றனர்.அவர்களுக்கு வேறு எந்தகெதியும் இல்லை.
நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர்,நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை என்கின்றனர்.எங்களால்தான் முதலமைச்சர் வந்தார்

என்கின்றார்கள்.வேலைநடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள்.இதனைவிட கேவலம் என்ன உள்ளது என்று இவ்வாறு பேசும் மாகாணசபை உறுப்பினர்களிடம் நான் கேள்வியாக கேட்டேன் என்றால் அவர்கள் முகத்தில் வெள்ளைத்துணியை போட்டுக்கொண்டுசெல்லும் நிலையேற்படும்.

அவர்கள் கொண்டுவந்த தேசிய அரசாங்கம்,அவர்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் அமைச்சர்களும் மூலமாக செய்யவேண்டிய வேலைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு கொண்டுவந்து பேசி ஊடகவியலாளர்கள் ஊடாக மாவட்டத்தில் உள்ள மக்களை ஏமாற்றும் செயற்றிட்டமாகவே நான் பார்க்கின்றேன் என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன்.