பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு ஆலயங்கள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இரண்டு மதுபானச்சாலைகளை மூடுமாறு பிரதேச ஆலயங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் எல்லையில் உள்ள கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி சந்தியிலும் அம்பிளாந்துறை முருகன்கோயில் அண்மையிலுமுள்ள இரண்டு மதுபானசாலைகளையும் மூடுமாறு இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலய பரிபாலனசபையும்.தாந்தாமலை முருகன் ஆலய பரிபாலனசபையும்,பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயபரிபாலனசபையும் கூட்டாக மட்டக்களப்பு பாவட்ட அரச அதிபரிடமும் சம்பந்தப்பட்ட பட்டிப்பளை பிரதேசசெயலாளரிடமும் தமிழ்தேசியகூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலயமானது கடந்த 1983ம் ஆண்டு சிவபூமியாக ஆலய பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை கடந்த போர்காலத்தில் படுவான்கரைப்பிரதேசம் எந்த மதுபானசாலைகளும் அற்ற பிரதேசமாகவும் இளைஞர்களிடையே மதுபாவனை இன்றி காணப்பட்டது.

ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்புக்கு மதுபானசாலைகள் இருப்பதே முக்கியகாரணமாகும்.

அம்பிளாந்துறை முருகன் ஆலயத்தில் இருந்து 200மீற்றர் தூரத்திலும் கற்சேனை பாடசாலையில் இருந்து 400மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ள மதுபானச்சாலையையும்,மணல்பிட்டி சந்தி கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் புனித பூமியின் அண்மையில் இருப்பதாலும் இந்த இரண்டு மதுபானசாலைகளாலும் பாரிய குடும்ப வன்முறைகளும் இளைஞர்கள்மத்தியில் தீய செயற்பாடுகளும் நாளாந்தம் அதிகரிப்பதாகவும் உடனடியாக இந்த இரண்டுமதுபான நிலையங்களையும் மூடிவிட உத்தரவு பிறப்பிக்கும்படி மூன்று தேசத்துகோயில்களின் நிர்வாகசபை கூட்டாகவேண்டுகோள் கொடுத்துள்ளனர்.