மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான நடைபெற்ற சுனாமி நினைவு தினம் -மாவை சேனாதிராஜாவும் பங்கேற்பு

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 12வது ஆண்டு நிறைவினையொட்டி நாடெங்கிலும் உணர்வுபூர்வான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகளவு உயிரிழப்புகளைக்கொண்ட பிரதேசமான கல்லடி மற்றும் திருச்செந்தூர்,நாவலடி பிரதேசங்களில் சுனாமி 12வது நிறைவு தின அனுஸ்டிப்புகள் சிறப்பாக இடம்பெற்றன.

திருச்செந்தூரில் உள்ள சுனாமி நினைவுத்தூபி அருகில் நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன்,ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிவாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று சுடரேற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோன்று டச்பார் மற்றும் நாவலடி பகுதிகளிலும் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களினால் நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா உட்பட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைவடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2 ஆயிரத்து 800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். நாவலடி டச்பார் புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இக்கிராமத்தில் மாத்திரம் 1800 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.