தேசிய உற்பத்தி திறன் விருதை முதன்முறையாக பெற்றுக்கொண்ட மகிழடித்தீவு வைத்தியசாலை

தேசிய உற்பத்தி திறன் 2015ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்று தேசிய மட்டத்தில் சிறந்த வைத்தியசாலையாக மூன்றாவது இடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.


தேசிய உற்பத்தி திறன் 2015ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு இரத்மலானை ஸ்டெயின் அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகம் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் உயர்அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின்போது முதல்முறையாக இந்த போட்டியில் பங்குபற்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று நேற்றைய தினம் விருதினையும் பெற்றுக்கொண்டது.

இந்த விருதினை மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் ரி.தவநேசன் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அதிதிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

தேசிய ரீதியாக முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்காக வழங்கப்பட்ட விருதில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச்சேர்ந்த திணைக்களங்கள், சேவை நிலையங்கள் போன்றனவும் பங்குபற்றி விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக படுவான்கரை பிரதேசத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்று இந்த போட்டியில் விருதுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.