ஜேர்மன் நாட்டை சேர்ந்த எல்லைகள் இன்றிய கோமாளிகளது மகிழ்விப்பு வேடிக்கை அளிக்கைகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த எல்லைகள் இன்றிய கோமாளிகள் என்னும் தொண்டு நிறுவனத்தின் தொண்டர்கள் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹரி சிறுவர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை தங்களது மகிழ்விப்பு வேடிக்கை அளிக்கையை நடத்தினர்.



இதில், ஏற்பாட்டாளராக அனற்இருந்து வருகிறார். அதே நேரம், ஹேக்கோ மில்லி,  ஸ்ரேபன்,ரமறாஆகியோரும் பங்கு பெறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இவ்வருடத்துக்கான எல்லைகள் இன்றிய கோமாளிகளது அளிக்கைகளுக்கான ஒழுங்குபடுத்தல்களை மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் வி.கமலதாஸ் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பின் சிவானந்தா வித்தியாலயம், விவேகானந்தா மகளிர் வித்தியாலயம், தன்னாமுனை- மியானி நகர் சோமஸ்கன் சகோதரிகள் சிறுமியர் இல்லம், இன்றைய தினம் சனிக்கிழமை செங்கலடி சிறுவர் இல்லம், ஹரி சிறுவர் இல்லம், களுவன்கேணி வேள்ட்விசன் பாலர் பாடசாலையிலும் அளிக்கைகள் நடைபெற்றன.

அதே நேரம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மைலம்பாவெளி விலேஜ் ஒப் கோப் சிறுவர் இல்லம், அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து இலங்கைக்கு வருகை தரும் எல்லைகள் இன்றிய கோமாளிகள் நிறுவனத்தினர் இலங்கை பூராகவும் உள்ள 30 வரையான சிறுவர் இல்லங்களுக்குச் செல்வதுடன், அங்குள்ள சிறுவர்களையும் தங்களது வேடிக்கைகளால் களிப்பூட்டி வருகின்றனர்.

இவர்கள் இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட நாட்டின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சிறுவர்களை மகிழ்விக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். கடந்த காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கும் சென்று அளிக்கைகளை நிகழ்த்தியுள்ளனர்.

அதே நேரம், இந்த எல்லைகள் இன்றிய கோமாளிகள் தொண்டு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளைகளையும் கொண்டு செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.