(பேரின்பராஜா சபேஷ்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தேசிய பாடசாலைளில் ஆசிரியர் ஆளணி மேலதிகமாகவுள்ள நிலையில் மாகாண பாடசாலைகளிலிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை விடுவிப்பதனால் கிராமப்புற பாடசாலைகளில் கல்வி நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மாகாண பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பொ.உதயரூபன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளில் 25ற்கும் மேற்பட்ட மேலதிக ஆசிரியர்கள் கடமைபுரிவதோடு திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் பல ஆசிரியர்கள் நீண்ட வருடங்களாக நேரசூசியின்றி கடமை புரிவதோடு அதிபர்களின் காரியாலய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இதனால் சிறப்பான மனிதவளங்கள் வீணடிக்கப்படுகினறன.
இக்கல்லூரிகளுக்கு மாகாண பாடசாலகளிலிருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவதனால் மாகாணத்துக்குட்பட்ட கிராமப்புற பாடசாலைகளில் ஆசிரியர் ஆளணி பற்றாக்குறை நிலவுவதோடு அப்பிரதேச மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலிருந்து சுமார் 100 மீற்றர் துரமான தேசிய பாடசாலையான மட்டு வின்சன்ட் மகளீர் கல்லூரிக்கு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதோடு ஏறாவூர்ப் பற்று, மண்முனை மேற்கு கோட்டங்களில் விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் குறித்த பிரதேச மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளது.
2007ஃ20 இலக்கமிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பலமுறை கல்வி அமைச்சின் முன்பாக பலதடவை கவனணீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தும் கலவி அமைச்சின் தேசிய பாடசலைகளுக்கான பணிப்பாளர் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. இப்போராட்டத்திற்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும் ஆதரவு தெரிவித்து கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டத்தில் கலந்துகொண்டது.
தேசிய பாடசாலை இடமாற்ற சபையை உடன்கூட்டி தேசிய பாடசாலை இடமாற்றத்தை ஒழுங்காக செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் முன்வரவேண்டும். 1990ம் மாகாண திருத்தச் சட்டத்தின் 42 இலக்கத்தின்படி கல்வி செயலாளரின் அனுமதியுடன் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சட்டத்தின் சம்த்துவமான பாதுகாப்பைக் கொண்டுள்ள ஏனைய ஆசிரியர்களின் சமத்துவக் கோட்பாட்டை மீறுகின்ற சமத்துவமின்மையினை கல்விச் செயலாளர் மேலான கருத்திற்கொண்டு நியாயமற்றதும் ஒருதலைப்பட்சதுமான தீர்மானங்களை இரத்துச் செய்து கல்விக்கான சமவாய்ப்பினை உறுதிசெய்தல் வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.